shadow

அம்பேத்கர் பெயர் உள்ள வரை இடஒதுக்கீடு தொடரும். கோவையில் பிரதமர் ஆவேச பேச்சு

VBK-MODI_1865200f_2646360fகோவையில் நேற்ற்று நடைபெற்ற இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அதன்ன் பின்னர்  பாஜகவின் பொதுகூட்டத்தில் தமிழக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்று நினைத்துப் பாருங்கள். தொலைக்காட்சியை ஆன் செய்தால் ஒவ்வொரு விதமான மிகப்பெரிய ஊழல்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்தன. அப்போது, மக்கள் நம்பிக்கை இழந்து இருந்தார்கள். இந்தியா முன்னேற்றம் அடையாதா என்ற விரக்தியில்  இருந்தார்கள். 

ஆனால், மத்தியில் ஒன்றரை ஆண்டு ஆட்சியின் மூலமாக தற்போது நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறோம். நாட்டின் எதிர்காலம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது சில பேருக்கு வலிக்கிறது. எப்படி தேநீர் விற்றவன் பிரதமர் ஆகி செயல்படுகிறான் என்ற கவலை அவர்களிடம் உருவாகியுள்ளது. அவர்களால் மக்களின் ஜனநாயக கட்டளையை ஏற்க முடியவில்லை. தோல்வியை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.  இதனால், அரசின் செயல்பாடுகளை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி அரசியல் நடத்தி வரும் அவர்களால் ஒரு  ஏழை தாயின் மகன் ஆட்சி நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனிமேல், ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி அரசியல் செய்ய முடியாதே என்ற கவலை அவர்களுக்கு வந்துவிட்டது.

இந்த ஒன்றரை ஆண்டில் எந்த அமைச்சர் மீதாவது, ஆட்சியில் உள்ள யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியவில்லை. அதனால், மோடியை என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள். அதனால், மக்களவையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இருப்பினும், இந்த எதிர்ப்பு, விரோத நடவடிக்கைகளுக்கு இடையே மக்களவையில் சிறப்பாக பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கான சிறப்பான திட்டங்களை இயற்றி வருகிறோம். ஆனால், மாநிலங்களவையில் அந்த தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறார்கள்.

முக்கியமாக, நான் ஆட்சி பொறுப்பேற்றபோது சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத, 1800 தேவையற்ற சட்டங்கள் இருந்தன. அவற்றில் 700 சட்டங்களை நீக்குவதற்காக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் மாநிலங்களவையில் நீக்க விடாமல் காங்கிரஸ் கட்சியினர் தடுக்கிறார்கள். 

இதேபோல், தற்போது உள்ள தொழிலாளர் சட்டத்தால் தொழிலாளர்களுக்கு போதிய அளவுக்கு போனஸ் கூட கிடைக்கவில்லை. அவர்கள் வாங்கும் போனஸ் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புக்கள் வாங்கிச் செல்வதற்குதான் சரியாக இருக்கிறது. எனவே, அந்த சட்டத்தை திருத்தி அவர்களுக்கு கூடுதலாக போனஸ் கிடைக்கச் செய்யலாம் என்றாலும் மாநிலங்களையில் நிறைவேற்ற விடாமல் செய்கிறார்கள்.

மொத்தமாக 60 ஆண்டுகளாக கிடைக்காத திட்டங்களை ஒன்றரை ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்கச் செய்துள்ளோம். இதனால், அவர்களின் (எதிர்கட்சிகள்) தூக்கம் போய்விட்டது. அம்பேத்கரின் 125-வது ஆண்டு விழாவை கொண்டாடி அவருடைய ஸ்டிக்கர், தபால் தலை ஆகியவற்றை வெளியிட்டோம். நாடாளுமன்றத்தில் அவர் குறித்து விவாதம் நடத்தினோம். லண்டனில் அவர் வாழ்ந்த வீட்டை அரசு சார்பில் மீட்டு நினைவு சின்னமாக்கியுள்ளோம். மும்பையில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், யாரெல்லாம் அவரை மறந்து இருந்தார்களோ, தலித் ஓட்டுக்காக இத்தனை ஆண்டுகாலம் அரசியல் செய்து வந்தார்களோ அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் பின்னால் தலித்கள் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. 

தலித்துகளுக்கு எதிரான ஆட்சி என பொய்யான தகவலை பரப்புகிறார்கள். இடஒதுக்கீடு குறித்து பொய்யான தகவலை பரப்புகிறார்கள். நான் ஒன்று கூறிக் கொள்கிறேன், காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட அவர்கள் முன்னுக்கு வர வேண்டும். அவர்கள் முன்னுக்கு வந்தால்தான் இந்த நாடு முன்னேறும். ஆகையால், அம்பேத்கர் பெயர் உள்ள வரை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” என்று கூறினார். தமிழகத்தில் இன்னும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படாததால் அவர் அதிமுக, திமுக என இரு கட்சிகள் குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply