shadow

மோடியால் எனது உயிருக்கு ஆபத்து. டெல்லி முதல்வர் அதிர்ச்சி தகவல்

aravindடெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடந்த பல மாதங்களாகவே பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த மோதல் உச்சகட்டத்தில் உள்ளதாக கருதப்படுகிறது. ஆம் ஆத்மியை அழிக்க மோடி தன்னை கொலை செய்யவும் துணியமாட்டார் என்ற ரீதியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மியை நசுக்க வேண்டும் என்பதற்காக சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு மூளையாக செயல்படுபவர் பிரதமர் மோடிதான். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர இரட்டை பதவி வகிப்பதாக பொய் குற்றச்சாட்டை கூறி, 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி அரசை முடக்க வேண்டும் என்பதற்காக டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை, சி.பி.ஐ., காவல்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை தவறாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், நமது துணிவை அசைக்க முடியவில்லை. நாம் வளைந்து கொடுக்கவில்லை. இதனால், பிரதமர் மோடி கடும் விரக்தியில் உள்ளார். அவர் அடுத்து என்ன செய்வார் என்று தெரியாது.

ஆம் ஆத்மியை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் (பிரதமர் மோடி) எந்த எல்லைக்கும் செல்வார். நாம் கொலை செய்யப்படலாம். நான் கூட கொல்லப்படலாம். அதனால், எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் மட்டும், எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள். எதையும் தாங்கும் வலு இல்லாதவர்கள் தயவு செய்து விலகி சென்றுவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, கூறியபோது, ”பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள், கண்டிக்கத்தக்கவை. வெட்ககேடான கருத்துக்களை அவர் கூறி உள்ளார். ஊழலுக்கு எதிராகவும், நன்னடத்தைகள் குறித்தும் பேசும் அவர், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட தனது கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக நிற்பது ஏன்?

சட்ட விதிகளை மீறுவோர் யாராக இருந்ததாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்” என்றார்.

Leave a Reply