shadow

ஆம்பூர் கலவரத்திற்கு காரணமான பவித்ரா சென்னையில் கண்டுபிடிப்பு

amburசமீபத்தில் பயங்கர கலவரத்தால் பாதிக்கப்பட்ட வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு நகரங்களிலும் இன்னும் பதட்டம் தணியாமல் இருப்பதால் அடுத்த 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா என்ற பகுதியை சேர்ந்த  பழனி என்பவரது மனைவி பவித்ரா  கடந்த மே மாதம் 24 ஆம் தேதி காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தரும்படி பழநி கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜ், ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது என்பவரை பிடித்து விசாரணை செய்தார். விசாரணை முடித்து திரும்பிய ஷமீல் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 25 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

போலீஸாரின் விசாரணையால்தான் ஷமீல் அகமது மரணம் அடைந்ததாக கருதிய ஷமீல் அகமதுவின் உறவினர்களும், ஆம்பூரை சார்ந்த முஸ்லீம் அமைப்புகளும் ஷமீல் இறப்பிற்கு காரணமான ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜை கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்களை எரித்தும், கடைகள் அடித்து உடைத்தும் நொறுக்கப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன பழநி மனைவி பவித்ராவை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் கண்டுபிடித்தனர். அதன்பின் அவரை வேலூர் மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆம்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பத்தூர் கோட்டாட்சியர் ரங்கராஜன், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 144 தடை உத்தரவு, வருகின்ற 15 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் அரசியல் தலைவர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply