சென்னையில் இதுவரை பேருந்துகள் செல்லாத இணைப்பு சாலைகளில் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக, 50 சிறிய பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல இடங்களில் குறுகிய சாலைகள், மக்கள் அதிகம் இல்லாத குடியிருப்பு பகுதிகளில் பெரிய பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை. எனவே அப்படிப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள், தினமும் 5 கி.மீ. தூரம் வரை ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோக்களில் பிரதான சாலைகள் வரை பயணிக்க வேண்டியதுள்ளது. இது அவர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது.எனவே இதுபோன்ற இடங் களில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறுவதற்காக 50 சிறிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துக்கழகம் மேற்கொண்டது. தற்போது 50 சிறிய பேருந்துகளும் தயார் நிலையில் உள்ளன.இந்த பேருந்துகளில் ஓட்டுனர், நடத்துனர் சேர்த்து 27 பேர் பயணிக்கலாம். ஏற்கனவே பேருந்துகள் ஓடாத இணைப்புச் சாலைகளில்தான் இவை இயக்கப்படும். பிரதான சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை இந்த சிறிய பஸ்கள் இயக் கப்படும்.
இந்த சிறிய பேருந்துகளின் தொடக்க விழா, சென்னையில் இன்று காலை 11 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இந்த 50 சிறிய பேருந்துகள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள ஏழு போக்கு வரத்து கழகங்களுக்கான 610 புதிய பேருந்துகளையும் இந்த விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். அதோடு, போக்குவரத்துக்கழகங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.257 கோடி பணப் பயன்களையும் இந்த விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் பிராஜ் கிஷோர் பிரசாத் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

Leave a Reply