shadow

mind_2408320f

மனப் பதற்றம் அல்லது மனப் பரபரப்பு என்பதை Anxiety Neurosis என்று அழைப்பார்கள். மனம் சஞ்சலம் அடைந்து இருப்பதை ஆயுர்வேதத்தில் சித்த உத்வேகம் என்று ரிஷிகள் கூறியிருக்கிறார்கள். இந்நிலை பொதுவாகவே பலருக்கும் காணப்படுகிறது. எல்லாவற்றையும் நினைத்துக் கவலைப்படுவது, ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக அது நடந்துவிட்டதாக நினைத்துப் பயப்படுவது. ஒரு சில நிகழ்வுகளைச் சந்திக்க முடியாமல் தவிப்பது அல்லது தவிர்ப்பது. இவையெல்லாம் sympathetic நரம்பு மண்டலத்தின் செயல்பாடாக இருக்கின்றன. மிகவும் அதிகமான, கட்டுப்படுத்த இயலாத, காரணமற்ற கவலைகள், எதிர்பார்ப்புகள் போன்ற அவஸ்தைகள் ஒரு நோயாளியிடம் குவிந்திருக்கும்.

இந்தக் கவலை அவருடைய அன்றாட வாழ்க்கையைப் பாதித்து, கவனத்தைக் குறைத்து, ஆரோக்கியம், சம்பாத்தியம், குடும்ப விஷயங்கள், நட்பு வட்டம், செயலாற்றும் திறன் போன்றவற்றைப் பாதிக்கிறது. இந்தப் பிரச்சினை உள்ள மனிதர்கள் பல விதமான உடற்கூறு அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.

அசதி, தலைவலி, உணவு செரிக்காமை, வாந்தி எடுக்கும் உணர்வு, கை மரத்துப்போதல், கால் மரத்துப்போதல், தசை இறுக்கம், தசை வலி, விழுங்குவதில் சிரமம், மூச்சு முட்டுதல், ஒருமுகத்தன்மை இன்மை, நடுக்கம், கோபம், தசைத் துடிப்பு, வெறுப்பு, வியர்வை, பதற்றம், உறக்கமின்மை, உடல் எரிச்சல் ஆகியவை இவர்களிடம் காணப்படும். ஆறு மாதங்களைக் கடந்தும் இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், பொதுப் பதற்ற நோய் GAD (Generalized Anxiety Disorder) என்று குறிப்பிடுவோம். ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தப் பதற்றம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.

நோய்க்கான காரணங்கள்

ஒரு சிலருக்குப் பரம்பரை வழியாகவும், இத்தகைய பதற்றம் வருகிறது. இதற்கான சிகிச்சை முறைகள் பல உள்ளன. மரபணுக்கள் அல்லது பிரகிருதி இதற்குக் காரணமாகிறது. வாழ்க்கையில் மன அழுத்தத்துக்கு ஈடுகொடுத்துச் செல்ல இயலாத நிலையும் இதற்குக் காரணமாகிறது. சிகிச்சையில், Benzodiazepine என்ற மருந்தை நவீன மருத்துவர்கள் பயன்படுத்துவது உண்டு.

நீண்ட நாட்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தும்போது, இதுவே பதற்றத்தைக் கூட்டலாம். நீண்ட நாட்கள் மது பானம் அருந்துவதாலும் இந்த நோய் வரலாம். 1988, 1990-களில் பிரிட்டன் மனநல மருத்துவமனையில், அங்கு வந்த பாதி நோயாளிகளிடையே மதுபானத்தினாலோ அல்லது ஒரு சில மருந்துகளாலோ பயம் இருப்பதைக் கண்டறிந்தார்கள். புகைபிடித்தல், காஃபின் (Caffeine) பழக்கம், புகையிலை ஆகியவையும் கெடுதல் என்றே கூறப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள்

இந்த நோயைக் கண்டறிவதற்கு அமெரிக்க மனோவியல் குழு கீழ்க்கண்ட அறிகுறிகளைக் குறிப்பிடுகிறது:

1. அதிக மனப் பதற்றம், சோகம், கவலை, பயத்துடன் கூடிய எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன் தினசரி இவ்வாறு இருத்தல் அல்லது குறைந்த பட்சம் ஆறு மாதங்களாக இவ்வாறு இருப்பது.

2. கவலையைக் கட்டுப்படுத்துவதில் சிரமம். பரபரப்பு, சிறிய வேலை செய்தாலும் சோர்வடை தல், ஒருமுகத்தன்மை இன்மை, சிந்திக்க இயலாமை, தசை இறுக்கம், எரிச்சல் அடைதல், ஆழ்ந்த உறக்கமின்மை, திருப்தியில்லாத உறக்கம், பதற்றத்துடன் கூடிய உறக்கம், உறங்குவதில் சிரமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்கூடக் குழந்தைகளுக்குப் பதற்ற நோய் இருப்பது தொடர்பாகப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். இது சமூகச் செயல்பாட்டுத் தன்மைகளைப் பாதிக்கிறது.

காரணம் என்ன?

சில மருந்துகளாலும் இது வரலாம். தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் வரலாம். OCD (சந்தேக உணர்வு ஏற்பட்டு ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்தல்) என்கின்ற ஒரு வகை மன நோயால் வரலாம். வாழ்க்கையில் நடந்த சங்கடமான நிகழ்வுக்குப் பின் வரலாம்.

இதேபோல அதிகமாகச் சாப்பிடும் anxiety nervosa, உடல் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மனநோய்கள், தனது உடலில் குறைபாடுகள் இருப்பதாக நினைக்கும் dysmorphic disorder, மனச் சிதைவு நோய்கள் போன்றவை இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.

தன்னிச்சை நரம்பு மண்டலங்கள் செயல்பாட்டின் அறிகுறிகளாகப் படபடப்பு, இதயத்தை யாரோ இடிப்பது போன்ற உணர்வு, அதிகமான இதயத் துடிப்பு, அதிக வியர்வை, நடுக்கம், வாய் உலர்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, நெஞ்சில் அழுத்தம், தொண்டையை அடைப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுக்கும் உணர்வு, வயிற்றில் கடைவது போன்ற உணர்வு போன்றவை காணப்படும்.

மூளை, மனம் சம்பந்தமாக மயக்க நிலை, நிலையற்ற தன்மை, கண் இருளுதல், பொருள்கள் உண்மையற்றது போன்ற உணர்வு, சுயகட்டுப்பாட்டை இழத்தல், மரணப் பயம் போன்றவையும் ஏற்படலாம். பொது அறிகுறிகளாக உடல் சூடாகும் அல்லது தணுக்கும். மரத்துப்போகும் அல்லது ஊசியால் குத்துவது போன்று இருக்கும். தசைகளில் இறுக்கம், வலி, குத்துதல், பதற்றம், தொண்டை அடைத்தல், விழுங்குவதில் சிரமம் போன்றவை காணப்படும். மனம் வெற்றிடமாகத் தோன்றுவது போலவும், சோகத்தால் நிரம்பியிருப்பது போலவும் தோன்றும்.

ஆயுர்வேத அணுகுமுறை

ஆயுர்வேதத்தில் முக்குற்றங்களாகிய வாத, பித்த, கபத்தில் வாதமானது ரஸ தாதுவில் சேரும்போது வாதத்தின் சலக் குணம் அதிகரித்து ரஸ துஷ்டி, சிந்தா துஷ்டி ஏற்பட்டு ஒருவருக்கு மனப் பதற்றம் ஏற்படுகிறது. இதனால் பிரக்ஞை (cognition) பாதிக்கப்படுகிறது.

பொதுவாகவே பிறவியிலேயே வாதத் தன்மை உடைய பிரகிருதிகள் (Mind-body constitution), இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்குப் பொதுவாகவே பதற்றம், பயம் கலந்த இயக்கம் ஏற்படும். இவற்றை ஆயுர்வேதத்தில் வாத உன்மதம், சித்த உத்வேகம் என்றும் குறிப்பிடுவார்கள்.

சிகிச்சைகள்

தலையில் க்ஷீரபலா எண்ணெய், பலா அஸ்வகந்தா எண்ணெய் போன்றவற்றைத் தேய்க்கச் சொல்லும்பொழுது sympathetic நரம்பு மண்டலத்தின் துரித நிலை குறைக்கப்படுகிறது.

எண்ணெய் குளியல் பதற்றத்தைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த மருந்து. அதுபோல் தினமும் மூக்கில் மூலிகைச்சாறு விட்டுச் செய்யும் நஸ்யம் ஒரு சிறந்த சிகிச்சை.

வாதத்தைத் தணிக்கிற, மனதில் வேலை செய்கிற அதிமதுரம், வெண்பூசணி, ஸ்வர்ண பஸ்பம், வெள்ளி பஸ்பம் மற்றும் காய்ச்சப்பட்ட வல்லாரை நெய், மண்டூகபரணி நெய், ஸாரஸ்வத நெய் போன்றவை இதற்குப் பலனளிக்கின்றன. வெண்தாமரை பால் கஷாயம் இதற்கு மிகவும் பலனளிக்கிறது. ஜடாமாஞ்சில் சூரணம், அமுக்குரா சூரணம் பாலில் சேர்த்துக் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கல்யாணக கிருதம், மஹாகல்யாணக கிருதம் போன்றவையும் நல்ல பலனைத் தருகின்றன. வல்லாரை, நீர்பிரம்மி, அமுக்குரா, ஜடாமாஞ்சில், வாலுலுவை, சங்குப்பூ, பவளப் பஸ்பம் போன்றவற்றைப் பொடித்து நெய்யில் கலந்து சாப்பிட்டுவரலாம். மதனகாமப்பூ சூரணம் 1 கிராம் வீதம் 2 வேளை சாப்பிட்டுவரச் சிறந்த பலனைக் கொடுக்கும். இது தவிர அதிமதுரம், அமுக்குரா, நெல்லிக்காய், மதனகாமப்பூ, நன்னாரி, நிலப்பனங்கிழங்கு மாத்திரை போன்றவை பலன் தருகின்றன. தலைக்குக் குளிர் தாமரை தைலம் மிகவும் பலனளிக்கிறது. நன்னாரி மணப்பாகு பதற்றத்தைக் குறைப்பதில் அனுபவத்தில் சிறந்த மருந்தாக இருந்துள்ளது.

ஆயுர்வேதத்தில் எண்ணெயைத் தலையில் தேக்கி வைக்கிற சிரோவஸ்தி, சிரோ தாரை போன்றவற்றைச் செய்வார்கள். ஓரிதழ் தாமரை சூரணம், கோஷ்ட சூரணம் நெய்யுடன் சேர்த்துக் கொடுக்கப் பதற்றம் குறையும். அஸ்வகந்த பலா லாக்ஷாதி எண்ணெயைத் தலைக்கும், உடலுக்கும் தேய்த்துக் குளிக்கலாம். பிரம்மித் தைலம் 5 சொட்டு வீதம் தலையில் தேய்த்து, பின்பு துடைத்து எடுத்துவிட வேண்டும். அஸ்வகந்தா லேகியம், மனோரஞ்சித லேகியம் போன்றவை சிறந்தவை. வல்லாரையை நெய்யாகக் காய்ச்சியும் கொடுக்கலாம். சீந்தில் கஷாயத்தில் கல்யாணக கிருதம் சேர்த்துச் சாப்பிடப் பரத்தம் குறையும்.

எளிய மருத்துவம்

# தேநீர். காபி குடிப்பதைத் தவிர்க்கவும். நிகோட்டின், மது, காஃபின் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைப் பொருட்கள் அனைத்திலும் உடலைத் தூண்டும் அம்சங்கள் உள்ளன.

# படுக்கும் முன், நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்த எண்ணெயை உச்சந்தலையில் நன்றாகத் தேய்த்துவிட்டுப் படுத்தால் மன அமைதி கிடைக்கும்.

# பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

# வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்துப் பால் கஷாயம் காய்ச்சிக் குடித்தால் மனம் அமைதி பெறும்.

# மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத்தில் தினமும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மன அமைதி கிடைக்கும்.

# மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கித் தினமும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் பதற்றம் குறைந்து மனம் அமைதி பெறும்.

# 20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மன அமைதி கிடைக்கும்.

# சிறிது குங்குமப் பூ, ஜாதிக்காய் விழுது சேர்த்த பாதாம் பால் குடித்தால் மனப் பதற்றம் குறையும்.

# மனம் அமைதியாகச் செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணாயாமம் தினமும் இரண்டு வேளை 5 நிமிடத்துக்குச் செய்யலாம்.

# சூரிய நமஸ்காரம் செய்யலாம் . இது உடலின் ரத்த ஓட்டம் சிறப்பாகச் செயல்பட உதவும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடும் நினைவுத் திறனும் கூடும்.

Leave a Reply