shadow

கலிபோர்னியாவில் கசிந்த நச்சு மீத்தேன் வாயு. எமர்ஜென்ஸியை பிரகடனம் செய்தார் கவர்னர்
methane
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென நச்சுத்தன்மை வாய்ந்த மீத்தேன் வாயு கசிந்துள்ளதால் உடனடியாக மாகாணம் முழுவதும் எமர்ஜென்ஸியை பிரகடனம் செய்துள்ளார் அம்மாகாண கவர்னர் ஜெர்ரி பிரவுன்.

அமெரிக்காவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் கேஸ் நிறுவனத்தின் கேஸ் குழாயிலிருந்து நச்சு வாயுவான மீத்தேன் திடீரென கசிந்ததால் மாகாணம் முழுவதும் உடனடியாக அவசர நிலையை பிரகடனம் செய்த கவர்னர், கசிவை அடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கலிபோர்னியா மாநிலத்தில் ‘சோகால்கேஸ்’ (Southern California Gas Company) என்ற தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கடந்த சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள அந்நிறுவனத்தின் கிணற்றில் இருந்து கேஸ் கசிவு ஏற்படுவது கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கசிவு நவம்பர் மாத இறுதியில் உச்சகட்டத்தை எட்டியதாக கலிபோர்னியா காற்று வள வாரியம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் தற்போதும் மணிக்கு 30 ஆயிரம் முதல் 58 ஆயிரம் கிலோ வரை நிறை கொண்ட மீத்தேன் வாயு காற்றில் கலந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வாயு கசிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகில் உள்ள போர்டர் ராஞ்ச் என்ற பகுதி பொதுமக்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குமட்டல், மூக்கில் ரத்தக் கசிவு ஏற்படுவதாகவும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில்  கலிபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இது குறித்து மீத்தேன் வாயு எடுக்கும் சோகால்கேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டின் லாய்ட் கூறும்போது, கசிவை அடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், துரிதமாகவும் பாதுகாப்பாகவும் கசிவை அடைத்து அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதே தங்கள் நோக்கம் என்றும் கசிவை அடைக்கும் பணி நிறைவடைய மார்ச் மாதம் வரை ஆகும் என்றும் சோகால்கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply