கருணைக்கொலை மசோதாவுக்கு கனடா பாராளுமன்றம் ஒப்புதல்
mercy kill
தீராத நோயால் பாதிக்கப்பட்டு நோயின் பிடியில் இருந்து மீள முடியாமலும் அதே நேரத்தில் சாகவும் முடியாமல் நரக வேதனை அனுபவித்து வரும் நோயாளிகள் மற்றும் மூப்பு காரணமாக படுத்த படுக்கையுடன் இருப்பது உள்பட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நபர்களை கருணைக்கொலை செய்யலாம் என கனடா நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா உள்பட இன்னும் பெரும்பாலான நாடுகளில் கருணைக்கொலைக்கு அனுமதி கிடைக்காத நிலையில் கனடா தைரியமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் ஊறப்படுகிறது.

உடல் உபாதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரை திட்டமிட்டு முடிவடையச் செய்வதைத்தான் கருணைக் கொலை (Euthanasia) என்று கூறுகின்றனர். இந்த முடிவு நோயாளியின் விருப்பத்தின் பேரில், மருத்துவரின் உதவியுடன் தன்வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவதால் இதற்கு உதவி செய்யப்பட்ட தற்கொலை என்றும் கூறப்படுவது உண்டு.

நோயாளியின் விருப்பத்தைப் பெற இயலாத நேரத்தில் (உயிரை பாதிக்கும் நோயுடன் பிறந்துள்ள குழந்தை, ஆண்டுக்கணக்கில் ஆழ்மயக்கத்தில் இருக்கும் நபர்) இதனை கருணைக் கொலை என்றும் கூறுவர்.

அவ்வகையில், கனடா நாட்டில் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயது மூப்பு சார்ந்த பிரச்னைகளால் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், கருணை அடிப்படையில் தற்கொலை செய்துகொள்வதற்கு  சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தற்போது ஒப்புதலும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டம்,  வரும் ஜூன் மாதம் நிறைவேற்றப்படும் என்றும் இந்த புதிய சட்டம் கனடா நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கனடாவில் வாழும் வெளிநாட்டினருக்கு பொருந்தாது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் இளம்வயது நபர்கள் இந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் தேட முடியாது. இந்த சட்டத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் நபர்கள் 15 நாட்களுக்கு முன்னதாக இதற்கென உருவாக்கப்படும் குழுவிடம் மனுச் செய்ய வேண்டும். தங்களது விருப்பத்தை இதற்கு இடைப்பட்ட காலத்தில் திரும்பப் பெறும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. இவ்வாறு அந்த சட்டத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *