shadow

download

அந்தி என்ற வார்த்தைக்கு அந்திமம், முடிவு சாயுங்காலம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். சூரியன் சாயுங்காலமான மாலை நேரத்தில் மொட்டுக்களை விரியச் செய்து கண்ணுக்கு அழகாய்க் காட்சி தருகின்ற ஓர் செடி வகை தான் அந்திமல்லி ஆகும். அந்திமல்லி தன்னோடு அழகை மட்டும் வைத்திருக்கவில்லை.

அகிலத்தவர்க்கு ஆரோக்கியம் தருகின்ற அருங்குணங்களையும் அடக்கி வைத்திருக்கிறது என்பதை இன்று நாம் அறிந்து கொள்ளுவோம். அந்திமல்லியை அந்தி மந்தாரை என்றும் தமிழில் குறிப்பதுண்டு. மாலை நான்கு மணிக்கு மலரத் தொடங்கி இரவு ஏழுமணிக்கு மேல் தொடங்கி காலையில் உதிர்ந்து போகும் பூக்களைக் கொண்டது.

அந்தி மல்லியின் பூக்கள் உணவுப் பண்டங்களுக்கு வண்ணம் தருவதற்காகப் பயன்படுத்துவதுண்டு. இதன் இலைகள் கீரையைப் போல உணவுக்குப் பயனாகும். மூலிகை மருத்துவத்தில் அந்திமல்லியை ஒரு சிறுநீர் பெருக்கி ஆகவும், மலமிளக்கி ஆகவும், காயங்களை ஆற்றவும் பயன்படுகின்றது. அந்திமல்லியின் வேர் இன உணர்வைத் தூண்டக் கூடியது என்றும் சிறுநீரைப் பெருக்க கூடியது என்றும் மலத்தை இளக்க கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீக்கங்களைக் கரைப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றது. அந்திமல்லியின் இலைகள் வலியையும் வீக்கத்தையும் கரைக்கும் வல்லமை உடையன. இதன் விதைகள் மிளகைப் போன்ற உருவத்தை ஒத்ததால் இதை மிளகோடு கலப்பதற்கு பயன்படுத்துவது உண்டு. அதிகமாக விதையை உணவுப்பொருளோடு சேர்ப்பது அதிக நச்சுத் தன்மையை சேர்ப்பதாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சிறுநீர் பெருக்கியாவும், வயிற்றைச் சுத்திகரிப்பதற்கும் கூட அந்திமல்லியின் வேர் பயன்படுத்தப்படுகின்றது. அந்திமல்லியின் இலைகளும் பூக்களும் கூட மருத்துவ குணங்களைப் பெற்று விளங்குகின்றன. இதன் சாற்றை எடுத்து மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது அக்கிப் புண்கள், காது சம்பந்தமான வலிகள், தோல் நோய்களான நமைச்சல், எக்ஸிமா, ஹெர்ப்பிஸ் தோலின் மேல் தோன்றிய புள்ளிகள், அழுகி நாற்றமடிக்கும் ஆறாத நாட்பட்ட புண்கள், தேனீ மற்றும் தேள் கடிகள் ஆகிய துன்பங்களினின்று விடுதலை கிடைக்கிறது.

பூக்களை நீரிலிட்டுக் காய்ச்சி வருகின்ற ஆவியை நுகர்வதால் அல்லது குளிக்கும் வெந்நீரில் இட்டு ஊறவைத்துக் குளிப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இயலும். அந்தி மல்லியின் பூக்கள் பொன்னுக்கு வீங்கி என்னும் நோயைக் குணப்படுத்துவதற்கும், குழந்தைப் பேற்றை துரிதப்படுத்துவதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது.

அந்திமலல்லி தொற்று நோய்க் கிருமிகளைத் தோற்று ஓடச் செய்விப்பது, நுண்கிருமிகளைத் தோற்றுவிப்பது, பூஞ்சைக் காளானைப் போக்கச் செய்வது ஒட்டுண்ணிகளை ஓட்ட வல்லது. அந்திமல்லியின் வேர்களில் ஆக்ஸிமிதைல் ஆந்த்ரோ குயினோன் என்னும் வேதிப் பொருள் மலிந்துள்ளது. இது வயிற்றுப் போக்கை உண்டாக்க கூடியது.

அந்திமல்லி சமூலம் டிரைகோ நெல்லின் என்னும் மருத்துவ வேதிப் பொருளை உள்ளடக்கி உள்ளது. இது மலமிளக்கியாகச் செயல்பட்டு மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்க்கு மருந்தாகவும், தணிப்பு மருந்தாகவும் பயன் தருகின்றது. இவை மட்டுமின்றி கேலக்டோஸ்அபினோஸ் ஸ்டிராய்ட்ஸ் கார்போ ஹைட்ரேட்ஸ் கிளைகோ ஸைட்ஸ் மற்றும் புரதச் சத்துக்களையும் அந்திமல்லி கொண்டுள்ளது.

அந்திமல்லி கணையம் மற்றும் கணையம் சார்ந்த பகுதிகளுக்கு பலமாய் நின்று சர்க்கரை நோய்த்தடுப்பு மருந்தாக உதவுகிறது. வெள்ளைப் பூக்களை உடைய அந்திமல்லியின் இலைகள் பல்வேறு நுண்கிருமிகளை எதிர்த்து அழிக்கவல்ல குணம் கொண்டது. அந்திமல்லியின் விதைகள் ரத்தத்தை உறையும் நேரத்தையும், கரையும் நேரத்தையும் பாதிக்கும் தன்மை வாய்ந்தது ஆகும்.

உலகின் பல இடங்களில் உள்ள பழங்குடி மக்கள் ரத்தக் கசிவு எங்கு ஏற்பட்டாலும் அதை தடுத்து நிறுத்தி அந்திமல்லி விதையை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதிக ரத்தப்போக்கு எவ்விதத்தில் ஏற்படினும் அந்திமல்லி விதைகளை மருத்துவர் அறிவுரையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்வதால் அடக்கி நிறுத்தப்படும்.

அந்திமல்லி விதையினின்று பிரித்தெடுக்கப்படும் புரதச் சத்துக்கள் புற்றுநோயைத் தடுக்க வல்லதாகவும், நுண்கிருமிகளைக் கொல்லக் கூடியதாகவும் விளங்குகிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீன மக்கள் அந்திமல்லியை சர்க்கரை நோய் தணிப்பு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

• அந்திமல்லி இலைகளை சேகரித்து மைய அரைத்து சாறு எடுத்து தோலில் தடிப்புடன் கூடிய நமைச்சல் ஏற்பட்ட போது மேலே பூசுவதினால் நமைச்சல் அடங்குவதோடு சில்லென்று சுகமாய் இருக்கும்.

• அந்திமல்லி சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றோடு போதிய தேன் கலந்து உள்ளுக்குக் குடிப்பதனால் பெண்களின் இன உறுப்பினின்று கசியும் வெள்ளைப் போக்கு மற்றும் அந்த வெள்ளைப் போக்கின் காரணமாக ஏற்பட்ட அரிப்பு, புண் ஆகியனவும் குணமாகும்.

• அந்திமல்லி இலைகளை நசுக்கி உடலில் வெப்பத்தினாலோ தீயினாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ ஏற்பட்ட நீர்க் கொப்புளங்களின் மேல் பூசி வைக்க கொப்புளங்கள் விரைவில் உடைந்து நீர்வற்றி இருந்த இடம் தெரியாமல் ஆறிப் போகும்.

• அந்திமல்லி இலையை மைய அரைத்து ஆறாது அடம் பிடிக்கும் நீர் சீழ்பிடித்த கட்டிகள் ஆறிப் போகும்.கொனோரியா என்னும் பால்வினை நோய்கள் வந்து துன்புறுத்தும் போது மனதாலும் உடலாலும் வேதனைப்படுகின்ற நிலை ஏற்படுகின்றது.

• இனஉறுப்புகளில் நாற்றம் தரும் வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு உடலை நலியச் செய்வதோடு அக்கம் பக்கத்தினரை அருவருப்பாய் நெளியச் செய்கின்றது. இப்படிப்பட்ட கொனோரியா என்னும் பால்வினை நோய்க்கு இரண்டு தேக்கரண்டி அந்தி மல்லிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து அந்திசந்தி என தினம் இரண்டு வேளைகள் சில நாட்கள் சாப்பிட்டு வர குணம் உண்டாகும்.

• கை, கால்கள் அடிவயிறு முகம் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் நீர்கோர்த்துக் கொண்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்பட்ட நிலையில் அந்திமல்லி இலைச்சாறு இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு உறவாகும்படி கலந்து தினம் இருவேளை உள்ளுக்குக் குடித்துவர உடலில் தங்கிய நீர்வடிந்து வீக்கம் வற்றிவிடும். அந்தி மல்லி ஓர் சிறந்த நீர்ப்பெருக்கி ஆகும்.

• அந்திமல்லியின் வேர்ப் பகுதியைக் எடுத்து நன்றாகக் கழுவி சுத்திகரித்து அதன் மேல் தோலை சீவி நீக்கிவிட்டு கிழங்கு பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மைய அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் மலத்தை இளக்கி வெளித்தள்ளும். வாந்தியை உண்டு பண்ணி வயிற்றைச் சுத்தம் செய்யவும் அந்திமல்லி கிழங்கு பசையைப் பயன்படுத்தலாம்.

• அந்திமல்லி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்து ஆறாத அழுகிய புண்களையும் புதிதாக அடிப்பட்ட காயங்களையும் கழுவி வர உடன் ஆறும்.

• அந்திமல்லி இலையைய சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து பழுக்காத கட்டிகளின் மீது சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி வதக்கிய இலைகளை அதன் மீது பரவலாக ஒட்டி வைக்க கட்டிகள் விரைவில் உடைந்து சீழ் வெளியேறி சீக்கிரத்தில் குணமாகும்.

• அந்திமல்லிக் கிழங்கை சுத்தம் செய்து நெய்விட்டு வதக்கி 10 முதல் 15 கிராம் அளவு வரை அன்றாடம் உண்டு வர உடல் பலம் பெறும்.

Leave a Reply