shadow

618-350x250

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டுதோறும் அரசுக்கு ”கண்ணிக்காணம்” என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கரிசலாங்கண்ணி தாவரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கரிசலாங்கண்ணிக் கீரையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. எக்லிப்டால், வெடிலோலாக்டோன், டெஸ்மீத்தைல், ஸ்டிக்மாஸ்டீரால், ஹெப்டாகோசனால், ஹென்ட்ரைஅக்கோன்டனால், போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.

இது கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. இதனை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இதனை உணவில் சேர்த்துக் கொண்டாலும், இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். தோல்நோய்கள், மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது. கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்குவதுடன் மண்ணீரல், பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு இதன் சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் ரத்த சோகை நீங்கி விடும். கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்து.ஆஸ்துமா குணமடைய கரிசலாங்கண்ணிச் சூரணத்தை திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட வேண்டும். ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும். கஷாயம் கர்ப்பப்பை ரத்தப்போக்குக்குப் பயன்படும்.

இதன் தண்டு தேள்கடிக்கு, வீக்கம், வாந்தி இவைகளுக்கு நன்மருந்து. தேனுடன் கரிசலாங்கண்ணியின் சாற்றைக் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் காற்றுக்குழாய் சார்ந்த அடைப்புகள் மற்றும் சளித்தொல்லை இவைகளை குணப்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய், வயிறு பொறுமல் உள்ளிட்ட நோய்களுக்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும். பொன்போல ஜொலிக்கும் கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும். தலைமுடி நன்கு வளர கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாகக் கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கறுப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநரை மாறிவிடும். பற்கள் உறுதியடையும் கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும். இதன் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும். இது மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

Leave a Reply