shadow

medicine_01013_1

மூலிகை சூப், மூலிகை ரசம், மூலிகை ஜூஸ் இவையெல்லாம், பலவிதமான நோய்கள் மற்றும் உடல் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகளைத் தரும் அருமருந்துகள்!

மூலிகை என்று சொன்னதுமே… ஏதோ அமேசான் காட்டிலிருந்து பறித்து வரப்பட்டு, பலவிதமான பக்குவம் செய்யப்பட்டு… என்று பதறி ஒதுங்க வேண்டாம். உங்கள் வீட்டில் அன்றாடம் உணவில் பயன்படுத்தக்கூடிய இஞ்சியும், பூண்டும்கூட அருமையான மூலிகைகள்தான். இதைச் சொன்னதும், ப்பூ… இவ்வளவுதானா? என்று மிகச்சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். அவற்றின் பலனை அனுபவித்துப் பார்த்தால்தான் அருமை தெரியும், புரியும்!

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தால் ரத்த அழுத்தம் சரியாகும். இதை இஞ்சி ஜூஸ் என்றுகூட சொல்லலாம். இதே இஞ்சிச்சாறுடன் நெல்லிக்காய், கறிவேப்பிலை, எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடித்தால், ரத்த அழுத்தம் சரியாவதோடு பித்த மயக்கம், கிறுகிறுப்பு, சோர்வு நீங்கும், நரை தள்ளிப்போவது, முதுமை விலகி இளமையை தக்க வைத்துக்கொள்வது போன்ற செயல்கள் நிகழும்.

காலைவேளையில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, 2 ஏலக்காய் சேர்த்து வடிகட்டி, சூடு கொஞ்சம் ஆறியதும் பசும்பால், சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் காலை நேர பித்தம் விலகும். ஜீரணக்கோளாறு விலகி நெஞ்சுக்கரிச்சல், வாயுத்தொல்லை விலகும். அன்றாட ஆரோக்கியத்துக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்தும் உடம்பில் சேரும்.

தனியா என்று சொல்லக்கூடிய கொத்தமல்லி விதையை லேசாக வறுத்துப் பொடித்து, அதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து பாலுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு நிற்கும். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் 3 மாதம் தொடர்ந்து இந்த மல்லி சுவைநீரை குடித்து வந்தால் காலப்போக்கில் போதைப்பழக்கத்தில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது.

வயிற்றுவலி யாருக்கு வந்தாலும், என்ன காரணத்தால் வந்தாலும் 5, 6 புதினா இலைகளை வெறுமனே சட்டியில் (வாணலி) போட்டு வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக வற்றியதும் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மிளகை வெறும் சட்டியில் போட்டு தீப்பொறி பறக்கும் அளவுக்கு வறுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதன் கஷாயத்தை (கொதித்து வடிகட்டிய நீர்) குடித்து வந்தால் காய்ச்சல் விலகும்.

டீ போடும்போது அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்னதாக 5, 6 துளசி இலைகளைப்போட்டு வடிகட்டி குடித்து வந்தால், மழைக்காலங்களில் வரக்கூடிய ஜலதோஷம், சளி தொந்தரவுகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

மழைக்காலங்களில் தாராளமாக கிடைக்கக்கூடிய முடக்கத்தான் இலைகளை மிளகு, பூண்டு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வடிகட்டி ’சூப்’ ஆக குடித்தால் மூட்டுவலி, வீக்கங்களில் இருந்து விடுதலை பெறலாம். வாதக்கோளாறு, பிடிப்பு, வாய்வுக்கோளாறு உள்ளவர்களும் இந்த சூப்பை அருந்துவதன்மூலம் நிவாரணம் பெறலாம். இதே முடக்கத்தானை ரசமாகவும் செய்து அருந்தலாம். முடக்கத்தான் ரசம் செய்வதுபோல, வாதநாராயணன் இலையையும் ரசமாக்கி குடித்தால், முடக்கத்தான் கொடுக்கும் அதே பலன்களை பெறலாம்.

கேரட்டை துருவிப்போட்டு கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவோம். அதே கேரட்டை ஜூஸாக்கியும் அருந்தலாம். இது கண் கோளாறுகளை சரி செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.

மணத்தக்காளி கீரையை சூப் ஆக அருந்தி வந்தால் ஜலதோஷம் நிற்பதோடு… சளி, தொண்டை வலி பிரச்னைகள் விலகும். அகத்திக்கீரையை சூப் ஆக்கி குடித்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விலகுவதோடு வீரிய மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் சரி செய்யும்.

தக்காளியை பிழிந்துவிட்டு, அதனுடன் நான்கைந்து பூண்டுப் பற்களை நசுக்கிப்போட்டு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து குடித்தால் ஜலதோஷம், இருமல் நிற்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியது இந்த தக்காளி சூப்.

பாகற்காயை சூப் ஆக்கி குடித்து வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நிவாரணம் தரும்.

இப்படியாக நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களையே சூப், ரசம், ஜூஸ், கஷாயம் என பல்வேறு வடிவங்களில் சாப்பிட்டு வந்தாலே நோய்கள் நீங்கி நலம் பெறலாம்.

Leave a Reply