shadow

இன்று முதல் கடலுக்கடியில் தேடுதல் வேட்டை. காணாமல் போன விமானம் கிடைக்குமா?

aircraftஇந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்32 ரக விமானம் கட்நத வெள்ளியன்று வங்காள விரிகுடா கடலில் திடீரென காணாமல் போனதை அடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேர் கதி என்னவென்று தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் விமானம் மாயமாகி நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித தகவல்களும் தடயங்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது தேடுதல் பணிக்கான இடம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கப்பல் மூலம் தேடப்படும் பரப்பளவு 14,400 சதுர கடல்மைல் ஆகும். விமானம் மூலம் தேடப்படும் கடலின் பரப்பளவு 60 ஆயிரம் சதுர கடல்மைல் ஆகும். தேடும் பணிக்கு இது மிகப் பெரிய அளவுதான். ஆனாலும் அனைத்து திசைகளிலும் தேடுதலை நடத்த வேண்டியது உள்ளதால் கப்பல் படையின் 13 கப்பல்கள், கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இஸ்ரோ, என்.ஐ.ஓ.டி. ஆகிய நிறுவனங்களின் உதவி, தெளிவான வானிலை இருந்தும் தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே அடுத்தகட்டமாக கடலுக்கு அடியில் சென்று தேடும் பணியை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் பல்வேறு தொழில்நுட்பத்தில் கடலுக்கு அடியில் இன்று முதல் தேடுதல் வேட்டை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபடும் இந்திய கடலோர காவல்படையின் தென்மண்டல ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா கூறியபோது, ‘விமானம் கடலிலோ அல்லது தரையிலோ விமானம் விழுந்தால், அதிலிருக்கும் டிரான்ஸ்மிட்டர் கருவிகள் செயல்படும். விமானம் காணமல் போனதற்கான காரணத்தை நாங்கள் கூற முடியாது. கடந்த ஒரு ஆண்டில் இதுபோல் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டுமே ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமாகி இருக்கின்றன. இரண்டு விமானத்திலும் இருந்தவர்களிடம் இருந்து கடைசி நேரத் தகவல்கள் வரவில்லை. மேலும், என்.ஐ.ஓ.டி. நிறுவனத்தின் கப்பலை தேடும் பணிக்கு கேட்டிருக்கிறோம். அது மொரிஷியசில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருக்கிறது. கடலடியில் மேற்கொள்ளப்படும் தேடுதலுக்கு அதுவும் பயன்படுத்தப்படும். கடல் மேல் மட்டத்தில் எந்தவொரு உடைந்த பாகமும் காணப்படவில்லை என்பதால், விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ள இடத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. ஆனாலும், விமானத்தில் இருந்து கடைசியாக எங்களிடம் தொடர்பு கொண்ட பகுதியை தேர்வு செய்து அங்கு தேடமுடியும். விமானத்தைத் தேடும் பணிக்கு காலவரையறை ஏதும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை” என்று கூறினார்

Leave a Reply