shadow

house (1)

நமக்கான இடத்தில் சிறியதாகத் தோட்டம் அமைத்து ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கனவு.

ஆனால் வீட்டு மனையை நம்பி யாரிடம் வாங்குவது? அப்படியே வாங்கினாலும் அதை முறையாக எப்படிப் பதிவு செய்வது என்பதில் சரியான புரிதல் இல்லாததாலேயே நிறையப் பேர் மனை வாங்குவதற்குத் தயங்குகிறார்கள்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வீட்டு மனையைத் தேர்வு செய்யும்போது முக்கியமாகச் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வீட்டு மனையை வாங்குவதற்கு முன், நேரடியாக மனை இருக்கும் இடத்துக்குச் சென்று, அந்த ஊரின் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் வாங்கும் நிலத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாங்கப்போகும் மனைக்கு அருகில் இருக்கும் சாலைகள் எத்தகையவை, இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றவா?

அல்லது உங்களின் மனைக்கு அருகில் ஏதாவது தொழில் நகரம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா போன்றவை வரவிருக்கின்றதா என்பதையெல்லாம் கூடுமானவரை அலசி ஆராய்ந்தபின்தான் மனை வாங்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

உங்கள் மனையையொட்டிக் கொண்டுவரப்படும் திட்டங்களால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு வீட்டு மனையை வாங்குவதற்கான முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும்.

ஆவணங்களைச் சரிபார்த்தல்

மனைக்கான பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை வில்லங்கம் இருக்கிறதா எனச் சரிபார்க்க வேண்டும். மனையை விற்பவர் அவரின் பங்குக்கு ஒரு வில்லங்கச் சான்றிதழைக் கொடுப்பார். மனையை வாங்கும் நீங்கள், அந்த மனை குறித்த விவரங்களை சப்-ரெஜிஸ்ட்ரரர் அலுவலகத்தில் கொடுத்து, உங்களுக்குச் சந்தேகம் தோன்றும் காலம் வரைக்குமான வில்லங்கச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

மனையின் சர்வே எண் முக்கியம்

நீங்கள் வாங்கும் மனையின் சர்வே எண், ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஒரு மாவட்டத்துக்கு உட்பட்டு வட்டங்கள் இருக்கும். வட்டங்களுக்கு உட்பட்டவை கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் நிலத்துக்கும் ஒதுக்கப்படும் புல எண்தான் சர்வே எண் எனப்படும்.

இந்த சர்வே எண்ணை மனை விற்பனையின்போது மிகவும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். பொதுவாக ஒரு நிலம் தொடர்பான தரவுகள் பதிவுத் துறையிலும், வருவாய்த் துறையிலும் இருக்கும்.

உங்களுக்கு விற்கப்படும் மனையின் உரிமை நீங்கள் வாங்கும் நபரிடம்தான் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆவணம்தான் பட்டா. இதில் குறிப்பிட்ட மனை இருக்கும் கிராமத்தின் பெயர், வட்டத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும்.

மேலும் மனைக்குரிய பட்டா எண், மனையின் உரிமையாளரின் பெயர், சர்வே எண் அதன் உட்பிரிவு, நிலத்தின் தன்மை, நிலத்தின் பரப்பளவு ஆகியவை அடங்கியிருக்கும். பட்டாவில் உள்ள விவரங்களை முழுக்கச் சரிபார்த்தபின் மனையை வாங்குவதே சிறந்த வழியாகும்.

Leave a Reply