shadow

7e3fddda-32ed-49ed-92ed-023f48f30769_S_secvpf

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், மணப்பாடு கடற்கரை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை இரவு 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் உயிருடன் கிடந்த 53 திமிங்கலங்களை கயிற்றில் கட்டி, படகில் இழுத்து சென்று ஆழ்கடலில் விட்டனர். இறந்த 42 திமிங்கலங்களை கடற்கரையில் புதைத்தனர்.

நேற்று காலையிலும் மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்துக்கு செல்லும் வழியில் உள்ள மணல்திட்டு பகுதியில் 11 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 9 திமிங்கலங்கள் இறந்து கிடந்தன. உயிருடன் கிடந்த 2 திமிங்கலங்களை கயிற்றின் மூலம் கட்டி, படகில் இழுத்து சென்று ஆழ்கடலில் விட்டனர். இறந்த திமிங்கலங்களின் உடலில் வெடிப்புகள் ஏற்பட்டு இருந்தன. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசியது.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் தெ.தியாகராஜன், தாசில்தார் வெங்கடாசலம், தேசிய பாரம்பரிய உயிரினங்களின் ஆராய்ச்சியாளர் லால் மோகன், மன்னார் வளைகுடா கடல் உயிரின காப்பக உதவி இயக்குனர் தீபக், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஐசக் மற்றும் அதிகாரிகள் இறந்த திமிங்கலங்களை பார்வையிட்டனர். கால்நடைத் துறை டாக்டர்கள் இறந்த திமிங்கலங்களை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவற்றை திருச்சிலுவை ஆலய மணல்குன்று அடிவாரத்தில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

மணப்பாட்டில் கருமேனி ஆறு சங்கமிக்கும் முகத்துவாரத்தில் 3 திமிங்கலங்கள் கிடந்தன. அங்கு அலைகள் இல்லாததால், அவைகள் நகராமல் கிடக்கின்றன. அவற்றையும் அதிகாரிகள் கண்காணித்து, ஆழ்கடலில் இழுத்து சென்று விட ஏற்பாடு செய்தனர்.

ஏற்கனவே கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் உயிருடன் இருந்தவைகளை கயிற்றில் கட்டி, படகில் இழுத்து சென்று ஆழ்கடலில் விட்டனர். அவற்றில் ஆழ்கடலுக்கு செல்லாத திமிங்கலங்களே நேற்று மீண்டும் திரும்பி கரை ஒதுங்கியதாகவும், மேலும் திமிங்கலங்கள் கரை ஒதுங்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply