shadow

ரீ யூனியன் தீவில் ஒதுங்கியது MH 370 விமானம்தான். மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு

mh370ரீயூனியன் கடற்கரையில் கரை ஒதுங்கியது மாயமான எம்.ஹெச். 370 விமானத்தின் பாகங்கள் தான் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH 370  திடீரெனக் மாயமாய் மறைந்து போனது. இந்தியப் பெருங்கடலில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது தகவல் தொடர்புகள் திடீரெனத் துண்டிக்கப்பட்டதால் அந்த விமானம் கடலில் விழுந்திருக்கும் என கூறப்பட்டது. பல நாடுகளின் மீட்புக்குழுவினர் அந்த விமானத்தை பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. மேலும், அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்னவென்று இன்று வரை தெரியாததால் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான ரீ-யூனியன் தீவில் கடந்த 29 ஆம் தேதி, மலேசிய விமானத்தின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. அது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370க்கு (போயிங் 777 ரகம்) உரியதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பாகத்தை ஆராய்வதற்காக மலேசியாவில் சென்ற நிபுணர் குழு கரை ஒதுங்கிய அந்த விமான பாகங்களை ஆய்வு செய்தது. அந்த பாகத்தில் கிடைத்த எண்ணின் அடிப்படையில் அது மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு உரியதுதான் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மடகாஸ்கர் அருகே இந்திய பெருங்கடலின் ரீயூனியனில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகங்கள், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாயமான எம்.எச். 370 பயணிகள் விமானத்தின் பாகம் தான். எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், விமானம் விபத்துக்குள்ளான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Leave a Reply