shadow

IMG_20151021_131708[1]

மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்வது ஏன்? அதற்கு ஏதாவது பூஜாவிதி இருக்கிறதா? இதன் தத்துவப் பின்னணி என்ன? – சுகுமார், சமயபுரம். ஆலயத்தில் அர்ச்சனைக்காக நாம் அளிக்கும் மலர்கள், வாழ்க்கையில் நமது உடல் தேடிக்கொண்ட உணர்வுகளாகிய வாசனைகளைக் குறிப்பவை.  அதனாலேயே வாசனையுள்ள மலர்களை இறைவனை அர்ச்சிக்க நாம் பயன்படுத்துகிறோம். மலர்களை வைத்து அர்ச்சனை செய்வதிலும் முறை  இருக்கிறது. பூஜை செய்பவர் ஐந்து விரல்களால் மலர்களை எடுப்பார். பின் வலது கையை உயர்த்தி, மெதுவாக இறைவனின் விக்ரகத்தின் பாதங்களில்  போடுவார். எல்லா மலர்களும் தீரும் வரையில் இப்படிப் போடுவார். கடவுளின் பாதங்கள் மிக உயர்ந்த உண்மையை அடையாளம் காட்டுபவை.

பாதங்கள் என்ற அடிப்படையில்தான் உருவம் எழுந்து நிற்கிறது. அது நம்முடைய தோற்றத்திற்கு அடிப்படை. அது உண்மை யாக இருந்தால்தான்  தோற்றமும் கம்பீரமாக இருக்கும். ஆகவே மலர்களை அப்படி இறைவனின் பாதங்களில் இடும்போது, உங்களுடைய உடலைப் பற்றிய உணர்வுகளாகிய  வாசனைகளை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, பேருண்மையை நாடிப் போகிறீர்கள் என்பது பொருள். ஐந்து விரல்களைக் குவித்துக் கீழே சாய்த்து  மலர்களை எடுக்கிறோம். ஐந்து விரல்கள் அப்படிக் குவிந்து நிற்பது ஐம்புலன்களைக் காட்டுகிறது. மனிதனின் ஐம்புலன்களும் உலகப்பற்றைப் பற்றிக்  கொள்ள விரும்பும்போது ஐம்புலன்களுடன் தொடர்புள்ள வாசனைகள் உருவாகின்றன.

ஆனால், இவை எதுவும் எனக்கல்ல, எல்லாமே இறைவனுக்கு அர்ப்பணம் என நினைக்கும்போது ஐந்து விரல்கள் நீள்வதைப்போல் ஐந்து புலன்களும்  உயர்வு அடைகின்றன. மலர்களை இறைவனின் பாதங்களில் போடும்போது இந்த உணர்வுகள் அழிந்து மறைந்து போகின்றன. மலர்கள் தீரும்  வரையில் பூஜையில் இடுவதுபோல, இந்த ஐம்புலன்களின் உணர்வுகளும் அழியும்வரை தெய்வ சிந்தனை யில் தொடர்ந்து ஈடுபடு கிறோம். பின் அந்த  இறை உணர்வுடன் ஐக்கியமாகி விடுகிறோம். 

Leave a Reply