shadow

28tvpt-mandalam_322219fசபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு பின் என்னென்ன பூஜைகள் நடக்கும்? பக்தர்கள் எந்த நாள் வரை தரிசனம் நடத்த முடியும் என்ற விபரங்களை தேவசம் போர்டு வெளியிட்டு உள்ளது. சபரிமலையில் இன்று மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. எனினும் வரும் 20ம் தேதி காலை 7 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பல்வேறு சடங்குகள் சபரிமலையில் நடக்கிறது.

sate10

எழுந்தருளல்: மகரவிளக்கு முடிந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து சன்னிதானத்தில் 18ம் படிக்கு முன்னர் யானை மீது எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இது ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாளிகைப்புறத்தம்மன் வருகிறார் என்பது ஐதீகம்.

188554_462552347128481_604155275_n

படிபூஜை: 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் படிபூஜை நடைபெறும். மாலை தீபாராதனைக்கு பின்னர் 7 மணிக்கு தொடங்கும் இந்த பூஜை இரவு 8 மணி வரை நடைபெறும். இதனால் இந்த நாட்களில் மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் 18ம் படியேற முடியாது.

d26-TV27PTMANDALAPUJ_19878fவரவேற்பு: பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்பட்ட போது பந்தளம் மன்னர் பிரதிநிதியாக வருபவர் 14ம் தேதி பம்பையில் தங்கி விடுவார். அவர் 16ம் தேதிதான் சன்னிதானம் வருவார். அவரை தேவசம்போர்டு சார்பில் வரவேற்கும் நிகழ்ச்சி அன்று மாலை 5 மணிக்கு பெரிய நடைப்பந்தலில் நடக்கும்.

நெய்யபிஷேகம்: 60 நாட்களாக நடந்த நெய்யபிஷேகம் 18ம் தேதி காலை 10 மணிக்கு நிறைவுபெறும். அதை தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு, தேவசம்போர்டு சார்பில் களபம் பூஜிக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனால் 18ம் தேதி காலை 10 மணிக்கு பின்னர் சன்னிதானம் வருபவர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது.

20tvpt-procession1__506778g
சரங்குத்திக்கு எழுந்தருளல்:
14 முதல் 17 வரை 18ம் படி முன்னர் எழுந்தருளும் மாளிகைப்புறத்தம்மன், 18ம் தேதி இரவு 9.30 மணிக்கு சரங்குத்திக்கு எழுந்தருளுவார். முதல் நான்கு நாட்கள் 18ம் படி முன்னர் செல்லும் மாளிகைப்புறத்தம்மன், ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டுகோள் விடுப்பதாகவும், கன்னி ஐயப்பன் வராத ஆண்டில் திருமணம் செய்வதாக ஐயப்பன் கூறியதாகவும், இதனால் கன்னி ஐயப்ப பக்தர்கள் சரக்கோல் ஊன்றும் சரங்குத்திக்கு மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளுவதாகவும் ஐதீகம். அங்கு மலைபோல் குவிந்துள்ள சரக்கோலை கண்டு தேவி திரும்ப கோயிலுக்கு எழுந்தருளுவார்.

தரிசனம் முடிவு:
19ம் தேதி இரவு 10 மணியுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும். 10.30க்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடக்கும்.

நடை அடைப்பு: 20ம் தேதி காலை 7 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் மேல்சாந்தி நடை அடைத்து சாவியையும், பணக்கிழியையும் கொடுப்பார். 18ம் படிக்கு கீழே வந்ததும் மீண்டும் அந்த சாவியையும், பணக்கிழியையும் மேல்சாந்தியிடம் கொடுத்து வரும் நாட்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி ஆபரணங்களுடன் மன்னர் பிரதிநிதி புறப்படுவார்.

Leave a Reply