shadow

மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவாதம். மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இந்த போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா மருத்துவ சங்க தலைவர் யாசோவர்தன் கப்ரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: மருத்துவர்களின் பாதுகாப்புக் குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை கண்காணிக்கப்படும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளதையடுத்து அனைத்து மருத்துவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை முதல் பணியை துவங்கிய மருத்துவர்கள், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக கருப்பு பேண்ட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து அம்மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மற்ற நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனிடையே, மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மகாராஷ்டிர முதல்வர் வேண்டுகோள் வைத்தார். அதைத் தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மருத்துவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்று வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மருத்துவமனைகளில் 500 பாதுகாவலர்கள் மற்றும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் மேலும் 600 பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவாதம் அளித்ததையடுத்து மருத்துவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

Leave a Reply