shadow

maggi noodlesதமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தடை விதிக்க மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டதை அடுத்து, இங்கிலாந்து நாட்டின் தரக்கட்டுப்பாட்டு மையம் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பனதே என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் கனடா நாடும் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளால் எவ்வித தீங்கும் இல்லை என்று கூறியுள்ளது.

இந்தியாவில் தயாரான மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளை  பரிசோதனை செய்த கனடா நாட்டு உணவு பரிசோதனை மற்றும் தர நிர்ணய ஆணையம் இன்று தனது பரிசோதனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மக்களுக்கு உகந்த பொருட்களை மட்டுமே எங்களது உணவு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்கிறது.

அதன்படி, எங்களது பரிசோதனையின் முடிவில் மேகி நூடுல்ஸில் அபாயகரமான உட்பொருட்கள் எதுவும் இல்லை. அதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதியான மேகி தொடர்ந்து இங்கு விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர் நாடு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் அரசு தடை விதித்திருந்தும் மேகி நூடுல்ஸ் கள்ள மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

Leave a Reply