shadow

ஏழு தீர்த்தக் கோயில்!

மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகாஞ்சனமாலையம்மன் கோயில். மதுரை அரசாளும் ஸ்ரீமீனாட்சியம்மன், தன் அம்மாவுக்கு முக்தி தந்த க்ஷேத்திரம் இது! ‘ஏழு தீர்த்தக் கோயில்’ எனும் பெருமையும் இந்த ஆலயத்துக்கு உண்டு.

புதுமண்டபத்துக்கு அருகில்…

மதுரை- ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ளது புது மண்டபம் எனும் பகுதி. இதையடுத்து உள்ள எழுகடல் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாஞ்சனமாலையம்மன் கோயில். ஏழு புண்ணிய தீர்த்தங்களும் சங்கமித்ததால் இந்தப் பகுதிக்கு ‘ஏழு கடல் தெரு’ என்றே பெயர் அமைந்து, இப்போது எழுகடல் எனப்படுகிறது.

முக்தி தரும் தலம்!

கௌதம முனிவர் காஞ்சனமாலையிடம், ”புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவனாரை வணங்கினால், உனக்கு முக்தி கிடைக்கும்” என அருளினார். புண்ணிய தீர்த்தத்தில், கணவரின் கரம் பற்றியோ, மைந்தனின் கரம் பிடித்துக்கொண்டோதான் குளிக்கவேண்டும் என்பது மரபு. ஆனால், காஞ்சனமாலைக்குக் கணவரும் இல்லை; மகனும் இல்லை. என்ன செய்வது என்று தவித்தாள்.

காஞ்சனமாலை என்பவள், வேறு யாருமில்லை; மதுரையம்பதியை அருளாட்சி செய்துகொண்டிருக்கும் மீனாட்சியின் தாயார்தான்.  தன் கவலையை மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. அதை அப்படியே ஸ்ரீசொக்கநாதரிடம் தெரிவித்தாள் ஸ்ரீமீனாட்சியம்மை.

உடனே சிவனார் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, சரஸ்வதி, கோதாவரி, காவிரி ஆகிய ஏழு நதி தீர்த்தங்களையும் ஒருசேரத் திரட்டினார். காஞ்சனமாலையின் கணவரான மலையத்துவச மன்னனை மேல் உலகத்தில் இருந்து வரச் செய்து, அவரின் கரம் பற்றி, புண்ணிய தீர்த்தத்தில் அவளை நீராடச் செய்தார். பிறகு, ஸ்ரீஉமையவளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அருளினார் ஸ்ரீபரமேஸ்வரன். அதையடுத்து, மலையத்துவச மன்னனையும் காஞ்சனமாலையையும் சிவகணங்கள் மேல் உலகத்துக்கு அழைத்துச் சென்றனர் என்கிறது ஸ்தல புராணம்.

மூலவரின் திருநாமம் –  எழுகடல் அழைத்த எம்பிரான். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீதடாதகை எம்பிராட்டி. மலையத்துவச பாண்டியனை அழைத்தல், எழுகடல் அழைத்தல் ஆகிய திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலம் எனும் பெருமை கொண்ட இந்த ஆலயம், சுமார் 1800 வருடப் பழைமை வாய்ந்தது. இங்கே, காஞ்சனமாலை யும் மலையத்துவச பாண்டியனும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.

நான்கு கால பூஜை!

இங்கு, மகா சிவராத்திரி விசேஷம். இரவு 10 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி மற்றும் 4 மணிக்கு சிவனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறும். ‘இந்த நாளில், சிவனாரையும் காஞ்சனமாலையம்மனையும் தரிசித்தால், நிம்மதியாக வாழலாம். முக்தி நிச்சயம்!’ என்கிறார் சுரேஷ் பட்டர்.

தம்பதி ஒற்றுமை!

இங்கு வந்து தம்பதி சமேதராக அருள்புரியும் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வேண்டினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர், தம்பதி இடையே கருத்து வேற்றுமை நீங்கும் என்பது ஐதீகம்!

Leave a Reply