shadow

stalinசென்னையின் அடையாளம் என கருதப்படும் மெட்ரோ ரயில் நேற்று முன் தினம் தொடங்கி பொதுமக்களின் நல்ல வரவேற்பை பெற்றிருந்தபோதிலும், மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகின்றது.

தமிழக எதிர்க்கட்சிகளும் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டுமென ஒட்டுமொத்தமாக கோரிக்கைகள் விடுத்துள்ளன. இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்த தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின் இன்று காலை மெட்ரோ ரயில் பயணம் செய்தார். பொதுமக்களோடு சேர்ந்து பயணம் மேற்கொண்ட அவர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணம் செய்தார். அவருடன் முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் மற்றும் சில தி.மு.க.வினரும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

மெட்ரோ ரயில் பயணம் பற்றி செய்தியாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, “தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் துவங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் மற்ற நகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதுடன் விரிவாக்கம் செய்யப்படும்” என்று கூறினார்.

மு.க. ஸ்டாலினை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் தனது மைத்துனர் சுதிஷுடன் மெட்ரோ ரயிலில் இன்று ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை பயணம் செய்தார்.

Leave a Reply