shadow

பொறியியல் கலந்தாய்வு: நேரடி கலந்தாய்வும் அவசியம். ஸ்டாலின் வலியுறுத்தல்

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுடன் நேரடி கலந்தாய்வும் அவசியம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இதுவரையிலும் மாணவர்களின் நேரடி பங்களிப்பில் நடைபெற்று வந்ததை திடீரென மாற்றி, 2018 பொறியியல் மாணவர் சேர்க்கை இணைய வழியாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய, நடுத்தட்டு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பெரும் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளானார்கள்.

ஆகவே, தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரையின்படி, பொறியியல் சேர்க்கை நடைபெறும் சேவை மையங்களில் விண்ணப்ப கட்டணமாக டிமான்ட் டிராப்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இணைய வழி விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, இந்த வழக்கை தி.மு.க. தொடுத்தது.

எனவே, இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply