shadow

rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் போல் வேறு எந்த படமும் இவ்வளவு பிரச்சனையை சந்தித்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தபடத்தின் பிரச்சனை அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்கின்றது.  ‘லிங்கா’ படத்தினால் தங்களுக்கு ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதற்கு தகுந்த நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வந்த விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்ததோடு, ரஜினியின் வீடு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

இதையடுத்து ரஜினி இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு, நஷ்டம் அடைந்த விநியோகிஸ்தர்களுக்கு திருப்பூர் சுப்பிரமணியம், தயாரிப்பாளர் சங்கம், மற்றும் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் ஆகியோர்களின் சமரச முயற்சியால்  ரூ.12 கோடி நஷ்ட ஈடாக விநியோகஸ்தர்களுக்கு அளிக்க முடிவானது.

ஆனால் முடிவு செய்தபடி ரூ.12 கோடியை தரவில்லை என்றும் ரூ.5 கோடி மட்டுமே தரப்பட்டு உள்ளதாகவும் மீதி தொகையை இன்னும் தரவில்லை என்றும் வினியோகஸ்தர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் தங்களுக்கு ரஜினி ஒரு படத்தில் நடித்து தருவார் என உறுதி மொழி அளிக்கப்பட்டு அதுவும் மீறப்பட்டுள்ளதாக புகார் கூறினர்.

இதையடுத்து ரஜினிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்களும் குதிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply