shadow

download (3)

தமிழகத்தில் சட்டப் படிப்புகளுக்கு மீண்டும் வயது உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச வயது வரம்பு சர்ச்சை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை (ஆக.12) முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

நீதிமன்ற உத்தரவுப்படி மூன்றாண்டு (எல்.எல்.பி.) சட்டப் படிப்புக்கு மீண்டும் வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. சேர அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 35.

சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்புக்கு அதிகபட்ச வயது 25 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை (ஆக.12) முதல் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறும். நிறைவு செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசித் தேதி. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், 2015-16 கல்வியாண்டு முதல், மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்கியும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை 21-ஆக உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவு காரணமாக, மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர 70 வயது முதியவரும் விண்ணப்பித்தார். இந்த நிலையில், வயது உச்சவரம்பை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வயது உச்ச வரம்பு தளர்வுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜூன் 18-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இதனால், ஜூன் 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை பல்கலைக்கழகம் நிறுத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான வயது உச்சவரம்பை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பழைய வயது உச்ச வரம்பே இந்தப் படிப்புக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

Leave a Reply