லட்சிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் டி.ராஜேந்தர் கடந்த சனிக்கிழமை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து டி.ராஜேந்தர் மட்டுமே வெளியேறி உள்ளார் என்றும், கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் டி.ராஜேந்தரின் தம்பியும், லதிமுகவின் அமைப்புச் செயலாளருமான டி. வாசு இன்று காலை அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த லதிமுக கொள்கை பரப்பு செயலாளர் ரோலக்ஸ் பாலன் “டி.ராஜேந்தர் கட்சிக்காக எந்த நன்மையும் செய்யவில்லை என்றும், கனடா நாட்டு ஏஜண்ட் ஒருவரிடம் கோடிக்கணக்கான பணத்தை கொடுத்துவிட்டு டி.ராஜேந்தரும் அவருடைய மகன் சிம்புவும் ஏமாந்துவிட்டபடியால் தற்போது அவருக்கு கடும் பொருளாதார நெருக்கடி இருப்பதாகவும் அதற்காகவே அவர் திமுகவில் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்ட ரோலக்ஸ் பாலன், டி. ராஜேந்தர் ஒருவர் மட்டும் கட்சியில் இருந்து வெளியேறியதால் கட்சி கலைக்கப்பட்டுவிட்டதாக கருதக்கூடாது என்றும் டி.வாசு தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் லதிமுகவின் செயற்குழு கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி சென்னையிலும், மாநில மாநாடு வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ஈரோட்டிலும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply