shadow

encounterகடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி அருகே ஆந்திர போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு இறந்தவர் குடும்பங்களுக்கு நிலம் மற்றும் அரசு வேலை வழங்குவதற்கு தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டதாக தேசிய பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவர் ரவி தாகூர் கூறியுள்ளார்.
பழங்குடியினர் ஆணையம்

தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் ரவி தாகூர் ஆந்திர துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர்களிடம் நேரில் விசாரணை செய்ய நேற்று சென்னை வந்தார். சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று காலை அவர் விசாரணை நடத்தினார். துப்பாக்கிசூட்டில் இறந்த சசிகுமார், சின்னச்சாமி உட்பட 6 பேரின் குடும்பத்தினர் அவர் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கோரிக்கைகளை ஆணையத்தலைவர் முன் வைத்தனர்.

அவர்களுடைய குறைகளை கேட்ட ரவி தாகூர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆந்திராவில் வனபாதுகாப்பு சட்டம் முறையாக பின்பற்றப்பட்டதா? என்பது தெரியவில்லை. நாங்கள் ஆந்திராவிற்கு சென்று விசாரித்த பிறகே தெளிவு கிடைக்கும். மனித உரிமைகள் ஆணையமும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வோம்.

துப்பாக்கிசூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் 10 ஏக்கர் நிலமும், வனத்துறையில் அரசு வேலையும் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த கோரிக்கைகளை கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆந்திராவில் சம்பவம் நடந்த இடத்தை இன்று  நேரில் பார்வையிட்டு பின்னர் அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். பின்னர் இந்த விசாரணை பற்றிய அறிக்கையை மத்திய பழங்குடியினர் நலத்துறையிடம் அளிக்கவுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply