அனா, ஆவன்னா கூட தெரியாதா லாலு ராப்ரி தேவி,

லாலுவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனும் வாழ்க்கை வரலாற்று நூலை பீகார் பத்திரிகையாளர் மனோஜ் சவுராசியா எழுதியிருக்கிறார். இந்த நூலை அறிமுகம் செய்து தெகல்கா வார ஏடு வெளியிட்டுள்ள கட்டுரையில் பல சுவாரசியமான சங்கதிகள் சமூகநீதியை வழிமொழிந்து சிரித்து வழிகின்றன.

1973ஆம் ஆண்டு லாலுவைத் திருமணம் செய்தபோது ராப்ரிதேவிக்கு வயது 14. வேலையற்று சுற்றிக்கொண்டிருந்த லாலுவுக்கு சீதனமாக 5000 ரூபாயும் சில பசுமாடுகளும் ராப்ரிதேவியால் கொண்டுவரப்பட்டன. ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட ராப்ரிதேவிக்கு பிறகு எழுதுவதும் படிப்பதும் முற்றிலும் மறந்துவிட்டனவாம். அதாவது அவர் ஒரு எழுத்தறிவிலி. 80களில் லாலு சமூகநீதித் தலைவராகப் பரிணமித்தபோது ராப்ரிதேவி பெரிய குடும்ப மனுஷியாக மாறியிருந்தார். 7 பெண் குழந்தைகளையும், 2 ஆண் குழந்தைகளையும் பெற்று வளர்த்தார்.

குழந்தைகள், குடும்பம் என்பதைத்தாண்டி அவருக்கு அரசியலில் அனா, ஆவன்னா கூடத்தெரியாது. லாலுவுடன் ராப்ரிதேவி அரசியல் பேசிய ஒரே தருணம் 95ஆம் ஆண்டு தனது சகோதரன் சாது யாதவுக்கு எம்.எல்.ஏ சீட்டு கேட்டு சிபாரிசு செய்ததுதான். அதை லாலு மறுத்து விட்டதால் ராப்ரி கடுங்கோபம் அடைந்தாராம். அதே சாது பின்னாளில் எம்.பி ஆனது வேறுகதை. இதைத் தவிர அரசியலுக்கும் ராப்ரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்தச்சூழ்நிலையில் 1997ஆம் ஆண்டு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலு சி.பி.ஐ விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்குச் செல்லவேண்டி வருகிறது. விடிந்தால் சிறை எனும் நெருக்கடியில் ராஷ்ட்ரீய ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் லாலுவின் தலைமையில் நடக்கிறது. அடுத்த முதலமைச்சராக யாரைத் தெரிவு செய்வது என்று லாலுவுக்கு குழப்பம். அப்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் அருகில் வந்து ராப்ரியின் பெயரை உச்சரித்தனர். தெளிந்த லாலு யுரேகா என்று கத்தியவாறு மகிழ்ச்சியடைந்தார். பிறகென்ன? அடுத்த நாள் லாலு சிறைக்குச் செல்ல ராப்ரி முதலமைச்சராக பதவியேற்றார்.

வீட்டுச் சமையலறையிலிருந்து முதலமைச்சர் அறைக்கு வந்த ராப்ரி அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சில மாதங்கள் பிடித்தது. பலநாட்கள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இந்த அப்பாவிப் பெண்மணிக்கு  எதுவும் பிடிபடவில்லை. யாரிடம் என்ன பேசுவது, கோப்பில் என்ன இருக்கின்றது என்றெல்லாம் தெரியாமல் தவித்து சோர்ந்து போயிருக்கிறார். அப்புறம் அதிகாரிகளின் உதவியால் என்ன செய்யவேண்டும் என்று சிறிதளவு தெரிந்து கொண்டார். சில அதிகாரிகள் அவருக்கு இந்தி வகுப்பெடுத்து குறைந்த பட்சம் கோப்பில் கையெழுத்திடவும், பெரிய எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கவும் கற்றுத் தந்தனர். ஏதாவது கூட்டங்களில் பேசவேண்டுமென்றால் உரை தயாரிக்க அதிகாரிகள் மிகவும் சிரமப்படுவார்களாம். எளிமையாக மனப்பாடம் செய்து ராப்ரி தேவியைப் பேசவைப்பதற்குத்தான் அந்தச் சிரமம். சுதந்திர தினத்தில் கொடியேற்றி ராப்ரி பத்து நிமிடம் பேசுவதற்கு பலநாள் ஒத்திகை நடக்குமாம்.

ஒருமுறை சுதந்திரதினத்திற்காக தூர்தர்ஷன் அணியினர் ராப்ரி தேவியை 20 நொடிகளில் ஒரு வாழ்த்து செய்தியை பேசவைப்பதற்கு ஒரு மணிநேரம் போராடினார்களாம். அதிலும் இறையாண்மை, சுதந்திரம் என்ற இரு வார்த்தைகளையும் அவரால் உச்சரிக்கவே முடியவில்லையாம். இத்தகைய நிருவாகச் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் பலமுறை அழுது, சிலமுறை கோபமடைந்து திடீரென்று வீட்டிற்கும் சென்றுவிடுவாராம். ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவர் சுசில்மோடி இவரை ராஜினாமா செய்யவேண்டும் என்று சட்டசபையில் பேசியபோது செருப்பால் அடிப்பேன் என்று ராப்ரிதேவி கத்தினாராம். அரசியலிலோ, நிருவாகத்திலோ தனக்கு பிடிக்காததை யாராவது கூறினால் ராப்ரிதேவி விவாதிக்க மாட்டாராம். மாறாகத் தனது கைவளையல்களைக் கழற்றி போட்டுக்கொள்ளுமாறு கிண்டல் செய்து, சாபமுமிடுவாராம்.

பிறகு சிறையில் இருக்கும் லாலு என்னென்ன செய்யவேண்டும்- செய்யக்கூடாது என்பதையெல்லாம் ஒவ்வொரு நாளும் ராப்ரிக்கு அதிகாரிகள் மூலம் உத்தரவு அனுப்புவாராம். இப்படித்தான் ஏழை மாநிலமான பீகாரை ஒரு அப்பாவிப் பெண்மணி முதலமைச்சராய் ஆண்டு வந்தார். இப்போது ராப்ரி எவ்வளவோ மாறிவிட்டார். அவரது திடீர் அரசியல் பிரவேசமும் முடிந்து விடவில்லை. கணவர் மத்திய அமைச்சராக டெல்லியில் பணியாற்றும்போது மனைவி மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகக் கடமையை ஆற்றுகின்றார்.

இதுதான் சமூகநீதிக் கட்சிகளின் யோக்கியதை. மக்களை எவ்வளவு அடிமுட்டாள்களாகக் கருதினால் லாலு இந்த நடவடிக்கையின் துணிந்து இறங்கியிருக்க முடியும்? ஐந்துக்கும் பத்துக்கும் வழியில்லாமல் இந்தியா முழுவதும் பிழைக்கச் செல்லும் பீகாரின் ஏழை மக்களுக்கு சமூகநீதித் தலைவர் லாலு காட்டிய மரியாதை இதுதான்.

லாலு அகோரமான முகம் ஒரு புறம் இருந்தாலும், நஷ்டத்தில் இருந்த ரயில்வே துறை லாபகரமாக மாற்றிய பெருமை லாலுவையே சேரும். பல நாடுகளுக்கு முன்னோடியாக நமது ரயில்வே துறையை மாற்றி படிக்காதவர் என்றாலும் ஜெர்மனி பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடம் நடத்திய மேதை.

உப்பு தின்றவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் தற்போது மாட்டு தீவன ஊழலில் மாட்டி கம்பிகளுக்கு பின்னால் சிறையில் உள்ளார். ஐயா நான் எந்த தப்பும் செய்யாத அப்பாவி என்று அவர் எழுப்பி கூக்குரல் நமது காதுகளில் விழுந்தது. அந்த நீதியரசர் காதில் விழவில்லையே!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *