shadow

போலீஸ் நிலையம் முன்பு கிரிக்கெட் விளையாடிய பெண் இன்ஸ்பெக்டர். வாட்ஸ் அப் வீடியோவில் அம்பலம்.

cricketராமேஸ்வரம் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் இன்ஸ்பெக்டர், பணியை பார்க்காமல் யூனிபார்மில் இருந்து கொண்டே சக காவல்துறை ஊழியர்களுடன் கிரிக்கெட் விளையாடியதாக எழுந்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு 24மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் ஒரு காவல்நிலையமும் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக அமுதச் செல்வி என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இரவு பணிநேரத்தில் காவல்நிலையத்தின் முன்பு அமுதச் செல்வியும் மற்ற காவலர்களும் போலீஸ் யூனிபார்முடன் கிரிக்கெட் விளையாடியதை ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவு செய்துள்ளார்.

சுமார் 1 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் முதலில் போலீஸ்காரர் ஒருவர் பேட்டிங் செய்ய, இன்ஸ்பெக்டர் அமுதச் செல்வி பவுலிங் போடுகிறார். பின்னர் இன்ஸ்பெக்டர் அமுதச் செல்வி பேட்டிங் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தவுடன் உடனடியா விசாரணை நடத்தி உத்தரவிட்டனர். விசாரணையில்  இன்ஸ்பெக்டர் அமுதச்செல்வி கிரிக்கெட் விளையாடியது உண்மைதான் என்று தெரியவந்ததால், அவரை ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டனர். பணியின்போது கிரிக்கெட் விளையாடிய மற்ற போலீசாரும் பல்வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நேரத்தில் யூனிபார்மில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கிரிக்கெட் விளையாடி, இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply