shadow

kushboo 1திமுகவில் இருந்து விலகி சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை குஷ்பு சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். காங்கிரஸில் இணைந்த பின்னர் அவர் முதல்முறையாக நேற்று விருதுநகரில் நடந்த பிரமாண்ட காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

விருதுநகரில் நடந்த பாரதியார் பிறந்த தின விழாவில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு பேசியதாவது:–

நான் வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த மருமகள். கடந்த 1987ம் ஆண்டு நான் சினிமாவில் நடிக்க வந்த போது எனக்கு தமிழ் தெரியாது. பின்னர் தமிழை கற்றுக் கொண்டேன், தமிழ் மக்களையும், தமிழையும் மிகவும் நேசிக்கிறேன். எனக்கு தமிழக மக்கள் மிகுந்த ஆதரவை தந்துள்ளார்கள்.

காங்கிரசில் சேர்ந்த எனக்கு சோனியா காந்தி மீதும், ராகுல்காந்தி மீதும் நம்பிக்கை உள்ளது. பா.ஜ.க. கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சியை பிடித்துள்ளது. அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று சொன்ன பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி. எந்த மோடி வித்தையாலும் காங்கிரஸ் கட்சியை அழித்து விட முடியாது. பெருந்தலைவர் காமராஜர் இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர பாடுபடுவேன். பந்தய குதிரை, சவாரி குதிரை இல்லாமல் ரேசில் ஜெயிக்கும் குதிரையாக காங்கிரஸ் மாறும். கடந்த தேர்தலில் தோற்று விட்டாலும் வருகிற 2016–ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்.

மத்திய மந்திரி ஒருவர் நாங்கள் எல்லாம் ராமர் பிள்ளைகள் என்று பேசுகிறார். அப்படியானால் மோடி ராமர், ராஜ்நாத் சிங் ராமர் என்று பெயர் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. காஷ்மீருக்கு சென்று இதை பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சி. காங்கிரஸ் கட்சி மீண்டு வரும், மீண்டும் வரும். நான் உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்க வருவேன். உங்களில் ஒருத்தியாக இருந்து காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன். தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்க நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

Leave a Reply