shadow

கர்நாடக முதல்வரானார் குமாரசாமி

காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி இன்று மாலை கர்நாடக முதல்வராக பதவியேற்று கொண்டார். பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தில் நடந்த இந்த பதவி ஏற்பு விழா இன்று மாலை 4:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.

குமாரசாமி முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பதவி ஏற்றவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதவி ஏற்பு விழாவுக்காக சுமார் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதான சவுதாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply