2012-08-11-281 ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக் கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. பிறகு அடுத்துள்ள நாட்டிற்கு சென்றார் மச்சமாக இருந்து மனிதனாக மாறிய அந்தப் பெரியவர்.இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின் கருணையினாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டியும் உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார். இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார். கிடைத்தால் உண்பார். இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல், வனங்களின் வழியாகவே தீர்த்த யாத்திரை செல்வார். ஒருநாள், சிற்றூர் ஒன்றில் உள்ள ஒரு வியாபாரியின் வீட்டின் முன் நின்று, நாராயணா என்று கூவினார். உள்ளே இருந்த வணிகனின் மனைவி அன்னத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் இவரது தோற்றத்தைக் கண்டு இவர் தெய்வாம்சம் பெற்றவர் என்று உணர்ந்தாள். பிறகு, இவரை நோக்கி, சுவாமி! இந்த வீட்டில் குழந்தை விளையாடும் பாக்கியம் இருக்கிறதா? என்று கேட்டாள். அவளது ஏக்கத்தை உணர்ந்த அவர், அம்மணி, இந்த திருநீற்றை உட்கொண்டால் உங்களது பாக்கியம் நிறைவேறும்.

திருமாலின் அம்சமாக ஒரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி ஒரு சிட்டிகை திருநீற்றை கொடுத்தார். அதை வாங்கி முந்தானையிலே முடிந்துவைத்துவிட்டு, வேலைகளைச் செய்யலானாள் அந்த அம்மாள்.பிறரை கலந்தாலோசிக்காமல் அந்தத் திருநீற்றை உட்கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை. அண்டை வீட்டிலுள்ள தன் தோழியிடம் இதைப்பற்றிக் கூறினாள். அவளோ, யார் எதைக் கொடுத்தாலும் நம்பி விடலாமா? எத்தனையோ பரதேசிகள் வருகிறார்கள். அவர்களெல்லாம் உண்மையான துறவிகள் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவர்களுள் ராவணச் சந்நியாசியும் இருக்கலாம். பைராகிகள் சொக்குப்பொடி போட்டு பெண்களை அழைத்துப் போவதும் உண்டு என உனக்குத் தெரியாதா? என்றாள். இவள் மனம் குழம்பிவிட்டது. எனவே விபூதியை அடுப்பில் போட்டுவிட்டாள். 12 ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் ஒருமுறை அந்த வீட்டின் முன் வந்து நாராயணா என்று கூறி நின்றார் மச்சேரந்திரநாதர். முன் போலவே அவளும் பிச்சையிட வந்தாள். இவர் அவளைப்பார்த்து, அம்மா! முன்பு திருநீறு கொடுத்தேனே, அந்தக்குழந்தை சவுக்கியமா? என்றார். அவள் பயந்து போனாள். இவரோ, மகா தபஸ்வியாக இருக்கிறார். சபித்து விடுவாரோ என்றுபயந்து நடுங்கினாள். தயங்கியவாறே விஷயத்தை சொன்னாள். இவரோ, நடந்தது நடந்துவிட்டது. போகட்டும். சாம்பலை எங்கே கொட்டினாய்? என்று கேட்டார். அடுப்புச் சாம்பலைக் கொட்டிய குப்பைமேட்டைக் காட்டினாள்.

கோரக்கர்

அவள் காட்டிய குப்பை மேட்டருகே சென்ற மச்சேந்திரர் சிறிது நேரம் மவுனமாக தியானித்துப் பிறகு, ஹம்ஸோவரம் என்று மும்முறை உச்சரித்தார். குப்பை மேட்டுக்குள்ளிருந்து ஹம்ஸோவரம் என்று ஒலி எழும்பியது. உடனே ஆட்களை அழைத்து வெகு பத்திரமாக குப்பையை தோண்டும்படி கட்டளையிட்டார். அந்த குப்பைக்குழிக்குள் பன்னிரண்டு வயதுடைய சிறுவன் அமைதியாகத் தூங்குவது தெரிந்தது.கண்டவர் வியந்தனர். இந்தப்பிள்ளை காற்றும், நீரும், உணவும் இன்றி, எப்படி உயிர்பெற்று இதனுள் இருந்தான் என பேசினர். ஊர் முழுவதும் இதே பேச்சாகி விட்டது.மச்சேந்திரர், குழந்தையை மேலே எடுத்து, அவயங்களை அசையச் செய்தார். இளைஞன், கை கால்களை உதறிக்கொண்டு எழுந்து நின்றான். இதற்குள் வணிகன் தன் மனைவியை நோக்கி, பெரியவர் பேச்சைக் கேட்காமல், அவசரப்பட்டுவிட்டாயே! என்று கடிந்தார். இருவரும் மச்சேந்திரர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தனர். அவர்களிடம் மச்சேந்திரர், உங்களுக்கு நல்லதொரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி, குப்பையிலிருந்து எழுந்த மகனை நோக்கி, மகனே! வருக, வருக! என அழைத்துக்கொண்டு தமது யாத்திரையைத் தொடர்ந்தார்.பூமியிலே பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தாலும், பூமாதேவியால் காக்கப்பட்டதாலும் இவனுக்கு கோரட்சகர் என்ற பெயர் வழங்கலாயிற்று. காலப்போக்கில் இப்பெயர் கோரக்கர் என்று ஆயிற்று. இநத கோரக்கர்தான் கபீர்தாசருடன் வாதம் புரிந்தவர். தனக்கு உபதேசம் செய்யும்படி மச்சேந்திரரைக் கேட்க, அவரோ, உரிய காலம், நேரம் வந்ததும் யாமே செய்வோம், என்றார்.கோரக்கர் மிகுந்த சந்தோஷத்துடன் குருநாதரைப் பின் தொடர்ந்தார். அங்கே, அழகிய காடுகளில் பர்ணசாலையில் முனிவர்கள் வசித்தனர். உபதேசம் பெறவும், சாஸ்திரங்கள் கற்கவும் மக்கள் இவர்களை நாடி வந்தனர். மச்சேந்திரர் ஓரிடத்தில் தங்காமல் சென்றுகொண்டே இருந்தார்.

கோரக்கர் தனது குருவிற்காக அனைத்து பணிவிடைகளையும் செய்து, சகல சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்தார். ஒருநாள் மச்சேந்திரநாதர் கோரக்கரிடம், அடுத்துள்ள நகருக்குச் சென்று பிச்சை எடுத்துவா என்றார். கோரக்கரும் சென்றார். அங்கே ஒரு வீட்டிலே பூஜை நடந்துகொண்டிருந்தது. கருணை மிக்க அந்த வீட்டுப் பெண்மணி, எல்லாவிதமான காய்கறி, பட்சணங்கள், பாயசம் முதலியவைகளை உணவளித்தார். அதை ஏற்றுக்கொண்டு மிகுந்த ஆனந்தத்துடன் குருவை அடைந்தார்.குருவும் மிகவும் திருப்திகரமாக சுவைத்துசுவைத்து சாப்பிட்டார். பிறகு நாளைக்கும் இதே வீட்டில் சென்றுவாங்கிவா என்றார். கோரக்கர் கவலையுற்றார். ஒரு வீட்டில் தினமுமா விசேஷங்கள் நடைபெறும் என எண்ணியவராய், அடுத்தநாள் அந்த வீட்டிற்குச் சென்று, அம்மணி! நீங்கள் நேற்று அளித்த அமுதுவகைகள் மிகவும் திருப்தியளித்தன. என் குருவும் திருப்தியுடன் சாப்பிட்டார். இன்றும் அதுபோலவே வேண்டும் என்றார். அந்தப் பெண்மணி, நேற்று விசேஷ பூஜை நடந்தது. அதனால் பலவகை உணவளித்தேன். தினமும் அவ்வாறு செய்ய முடியுமா? அரிசி வேண்டுமானால் வாங்கிப் போங்கள் என்றாள். இவரோ, அந்தச் சமையல்தான் வேண்டும் என பிடிவாதமாகக் கேட்டார். இதென்ன பிடிவாதம்? உன் குரு, இல்லாததை கொடு என்றால் எப்படி கொடுப்பது? நல்ல குருநாதர்தான். அவர், உன்னிடம் உன் கண்ணைப்பிடுங்கிக் கொடு என்றால் கொடுப்பாயா? என்று கோபமாகக் கேட்டாள்.அதற்கு கோரக்கர், ஏன்? குருநாதர் கேட்டால்தான் கொடுப்பேனா? நீங்கள் கேட்டாலும் தருவேன்.

எனக்குத் தேவை என் குருநாதர் கேட்ட அதே அமுதுதான் என்றார். அப்படியானால், உன் கண்ணைக்கொடு, அமுது கொடுக்கிறேன் என்றாள் அந்தப் பெண் விளையாட்டாக. இவரும், ஓ! அப்படியே ஆகட்டும் என கண்ணைத் தோண்ட ஆயுதம் தேடினார். இந்தபெண் சீடனது உறுதியைக் கண்டு, மீதியிருந்த பட்சணங்களுடன் அமுது கொடுத்தாள். கண்களை தோண்ட முயற்சித்ததால் கண்கள் புண்ணாகி இருந்தது.சீடனைக்கண்ட குரு, கண்களிலென்ன காயம்? என கேட்க, கோரக்கர் நடந்தவைகளை அப்படியே சொன்னார்.உடனே குரு, எனக்கும் உன் கண்கள்தான் வேண்டும். தருவாயா? என்றார். அதற்கு சுவாமி! உடல், பொருள், ஆவி அனைத்தும் உங்களுக்கே அர்ப்பணம். அப்படியிருக்க, கண்களுக்கென்ன? இதோ தருகிறேன் என எழ, அவரைத்தடுத்த குரு, அப்பா கோரக்கா! உன் குருபக்தியை சோதிக்கவே இப்படிக் கேட்டேன். உபதேசம் பெறும் தகுதியை நீ அடைந்துவிட்டாய் என்றுகூறி கோரக்கரின் தலைமீது கைவைத்து ஸ்ரீ ராம தாரக மந்திரத்தை உபதேசித்தார். குரு காணிக்கையாக கண்களைத் தர முன்வந்த கோரக்கரின் குருபக்தி போற்றுதற்குரியது!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *