shadow

டிப்ஸ்… டிப்ஸ்…

தோசை சுடும்போது கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு எடுக்க முடியாமல் இருந்தால், கோலி அளவு புளியை ஒரு வெள்ளைத்துணியில் மூட்டையாகக் கட்டிக்கொண்டு, எண்ணெய் தொட்டு கல்லில் தேய்த்து, பிறகு மாவை வார்த்தால் தோசை நன்றாக வரும்.

சாதம் வடித்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூளும், பனங்கற்கண்டும் சேர்த்துக் கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க… வயிற்று உப்புசம் போயே போச்சு!

வெந்தயக்குழம்பு வைக்கும்போது, குழம்பு கொதித்து வரும் சமயம் 2 அப்பளங்களை அதில் நொறுக்கிப் போடுங்கள். அப்புறம் பாருங்கள் அதன் சுவையை!

ஆப்பிள் சாற்றுடன் வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் சேர்த்து கரைத்து, வெந்நீர்விட்டு கலக்கி, தலைக்கு தேய்த்து அலசினால்… தலையில் உள்ள பிசுபிசுப்பு, சிக்கு நாற்றம் நீங்கிவிடும்.

ஓமம் கலந்த சுடுநீரை ஃப்ளாஸ்க்கில் ஊற்றிவைத்து, சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவினால், ஃப்ளாஸ்க்கில் இருக்கும் துர்நாற்றம் போய்விடும்.

கம்பளி போன்ற ஆடைகளை மடித்து அலமாரியின் உள்ளே வைக்கப் போகிறீர்களா? ஒரு நிமிஷம்! நடுவில் வேப்பிலையை வைத்து கட்டி வைத்தால், கம்பளியில் ஓட்டை விழாது.

கறிவேப்பிலை வாடாமல் இருக்க, வாழை இலையில் சுற்றி வைக்கலாம். பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தண்டு பாகத்தை தண்ணீரில் வைத்தாலும் வாடாமல் இருக்கும்.

தேங்காய்ப்பால் எடுப்பதற்கு தேங்காய்த் துருவலை அரைக்கும்போது வெந்நீர் தெளித்து அரைத்தால், பால் கெட்டியாகக் கிடைக்கும்.

முட்டைகோஸை சமைக்கும்போது அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்தால், முட்டைகோஸில் இருந்து வரும் வாடை அகன்று விடும்.

Leave a Reply