shadow

images (1)

எந்த ஊறுகாயாக இருந்தாலும் அதில் எண்ணெயைக் காய்ச்சி, ஆற வைத்து, பிறகு சேர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் நீண்ட நாட்களுக்கு ஊறுகாயில் பூசணம் பிடிக்காமல் இருக்கும். ஒரு பாட்டில் ஊறுகாய்க்கு 2 டீஸ்பூன் அளவு வினிகரை ஊற்றி வைத்தால், நீண்ட நாட்களுக்கு ஊறுகாய் கெடாமல் இருக்கும்… பூசணம் படிவதும் தடுக்கப்படும்.

மாங்காயை சீவும் போது தோலை எறிந்துவிட வேண்டாம். உளுந்து வடை மாவில் மாங்காய் தோலையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்யலாம். மாங்காய் மணம் கமழ, உளுந்து வடை வித்தியாச ருசியோடு இருக்கும்.

ஒரு பாட்டிலில் எண்ணெய் தடவி, அதில் சிறிது எலுமிச்சைச்சாறு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குலுக்கிக் கொள்ளவும். அதனுடன் தயாராக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைச் சேர்த்து சாலட் செய்யலாம். ருசி அருமையாக இருக்கும்.

தொக்கு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

சப்பாத்தி மாவில் அதன் அளவுக்கு ஏற்றாற்போல, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் பால் விட்டு பிசைந்தால் எண்ணெய்விட்டு சப்பாத்தி சுட வேண்டிய அவசியமே இருக்காது. சப்பாத்தியும் சாஃப்டாக இருக்கும்.

குலாப் ஜாமூனை வழக்கம் போல் உருட்டி, நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும். ஜாமூன்களை சூடாக சர்க்கரைப் பொடியில் பிரட்டி எடுக்கவும். பிரமாதமான ‘ட்ரை குலாப் ஜாமூன்’ ரெடி!

கேழ்வரகு, கம்பு, பாசிப் பயறு, பட்டாணி, தட்டைப் பயறு, கொள்ளு, வேர்க்கடலை, கோதுமை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும்.அவற்றை முளைவிட வைத்து, நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும் அவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் தேவைக்கேற்ப சுக்கு, ஏலக்காய் கலந்து, பிஸ்தா, முந்திரி, பாதாம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து, இந்த சத்து மாவைக் கஞ்சியாகக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ருசியும் மணமும் அசத்தும்.

இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்குவதற்கு பதில், சீவல் கட்டரில் சீவி (துருவி) பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் போது சமையலில் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும்.

சப்பாத்தி மாவைப் பிசைந்து அதிக நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சாஃப்டாக இருக்கும். பூரி மாவை பிசைந்தவுடன் இட வேண்டும். அப்போது தான் அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.

அனைத்துவிதமான பொங்கலுக்கும் அரிசி, பருப்பை வெறும் கடாயில் வறுத்துச் செய்தால், பொங்கல் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

நல்லெண்ணெய் வாங்கி வந்தவுடன், அதில் ஒரு துண்டு கருப்பட்டியைப் போட்டு வைத்துவிட்டால், நீண்ட நாட்கள் வரை ‘சிக்கு வாடை’ ஏற்படாது. செக்கில் இருந்து ஆட்டி எடுத்தது போல மணமாகவும் இருக்கும்..

கீரை மற்றும் வெஜிடபிள் கட்லெட் செய்யும் போது, சிறிதளவு சாதத்தை நன்கு மசித்துச் சேர்த்து, செய்யலாம்… மிருதுவாக இருக்கும்.

ஃப்ரைடு ரைஸோ, வெஜிடபிள் பிரியாணியோ செய்யும் போது, சிறிது வேக வைத்த சோளத்தையும் சேர்க்கலாம். பார்க்க முத்து முத்தாக அழகாக இருக்கும்… சுவை அமர்க்களப்படும்.

Leave a Reply