கிருமிகளை வளர்க்கும் கைப்பேசிகள்!

handwash-poster-brandedஹாலிவுட் படங்களில் மனிதர்களுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இடையே யுத்தம் வருவதாக அவ்வப்போது பார்த்திருப்போம். ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஆபத்தான கிருமிகளுக்கும் நமக்கும் ஏற்கெனவே ஒரு யுத்தம் சத்தமில்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எபோலா போன்ற புதுப் புதுப் பெயர்களில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்கள் அதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ‘நாங்க எல்லாம் ரொம்ப சுத்தம்…’ என்று சொல்பவர்களைக் கூட யோசிக்க வைத்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

 

‘பக்கத்தில் யாராவது தும்மினாலே ‘அய்யோ கிருமி… கிருமி’ என்று எச்சரிக்கையோடு முகத்தை மூடிக் கொள்பவராகவோ அந்த இடத்தை விட்டே ஓடிப்போகும் நபராகவோ நீங்கள் இருக்கலாம். ஆனால், அதைவிடப் பலமடங்கு கிருமிகள் உங்கள் சுத்தமான வாழ்க்கையிலேயே இருக்கிறது தெரியுமா?’ என்று ஆரம்பத்திலேயே நமக்கு செக் வைக்கிறது அந்த ஆய்வு. 54வது சர்வதேச அறிவியல் மாநாட்டில் மிசிகிகிசி என்ற அமைப்பு இது பற்றி நேரடியாக ஒரு சோதனையை நடத்திக் காட்டியது.

 

‘2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் 40 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை கைகள் வழியாகக் கிருமிகள் பெருகிப் பரவுகின்றன’ என்பதை ஆதாரப்பூர்வமாக அதில் விளக்கினார்கள். இந்தப் பரிசோதனைக்காக ‘பாக்டீரியோபேஜ் எம்.எஸ்.2’ என்ற மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வைரஸ் எடுத்துக் கொள்ளப்பட்டது. மனிதர்களிடம் தொற்றிப் பரவக்கூடிய நோரோ வைரஸின் உருவத்திலும் அளவிலுமே இந்த ‘பாக்டீரியோபேஜ் எம்.எஸ். 2’வும் இருந்தது (இந்த நோரோ வைரஸ் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை உருவாக்கக் கூடியது).

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த ‘பாக்டீரியோபேஜ் எம்.எஸ் 2’ வைரஸ், மனிதர்களின் கைகள் அதிகம் படக்கூடிய கதவு கைப்பிடிகள், மேஜை விரிப்புகள் ஆகியவற்றில் சாம்பிளுக்கு வைக்கப்பட்டது. வைத்த வேகத்திலேயே இந்தக் கிருமிகள் மனிதர்கள் மூலம் அலுவலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தன. ஸ்விட்சுகள், தேநீர் கோப்பைகள், தொலைபேசிகள், நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் என்று வேகமாகப் பரவ ஆரம்பித்த வைரஸ்கள், 4 மணி நேரத்துக்குள் 60 சதவிகித அலுவலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த எண்ணிக்கை ‘ஒருவர் தும்மும்போது பரவும் கிருமிகளைவிட பலமடங்கு அதிகம்’ என்பதை ஆய்வாளர்கள் புரிய வைத்தார்கள்.

 

‘இதுக்கு என்னதான் செய்வது?’ என்று கவலையோடு கேள்வி கேட்டவர்களுக்கு, ‘இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்’ என்ற ரீதியில் ஆய்வாளர்கள் பதில் சொன்னார்கள். ‘வைரஸ் பற்றி உங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகத்தான் இந்த ஆய்வு. எனவே, கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். குறிப்பாக சாப்பிடும் முன் கண்டிப்பாகக் கிருமி நாசினிகளைப் பயன்படுத்துங்கள். இது 80 முதல் 99 சதவிகிதம் வரை கைகள் மூலம் கிருமிகள் பரவுவதைத் தடுக்கிறது’ என்றார்கள். ஏற்கெனவே, டாய்லெட்களில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையைவிட உங்கள் கம்ப்யூட்டர் கீபோர்டிலும் நீங்கள் எப்போதும் இணைபிரியாமல் வைத்திருக்கும் செல்போனிலும் இருக்கும் கிருமிகள் அதிகம் என்று ஓர் ஆய்வு அதிர்ச்சி கிளப்பியது. இப்போது இந்த ஆய்வு வந்திருக்கிறது. சுத்தத்தில் நமக்கு இன்னும் பயிற்சிகள் வேண்டுமோ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *