shadow

kids_ipad600x-350x250

சில நேரங்களில், அளவுக்கு அதிகமாக கிடைக்கக்கூடியது கூட நமக்கு போதுமானதாக இருப்பதில்லை! கேட்ஜெட்ஸ் கருவிகளுடன் நேரத்தை செலவழித்தல் என வரும் போது, இன்றைய குழந்தைகளிடம் காணப்படும் மனப்போக்கு இது. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நீண்ட நேரத்திற்கு கேட்ஜெட்களைப் பயன்படுத்தும் போது, குழந்தைகளின் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான உடல்நலத்தில் பல ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும். நாளடைவில், இதுவே உணர்ச்சி ரீதியான, மன ரீதியான மற்றும் உடல் ரீதியான வளர்ச்சியிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

உங்கள் குழந்தைகளை குறை கூறுவதற்கு முன்பு, உங்களது வாழ்க்கை முறையை முதலில் பாருங்கள். நீங்கள் கேட்ஜெட் பயன்படுத்தாமல் இருக்க முதலில் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கேட்ஜெட்களுக்கு அடிமையாகி விட்ட உங்கள் குழந்தைகளை எப்படி மாற்றுவது என குழப்பமாக உள்ளதா? அவர்களை இந்த பழக்கத்தில் இருந்து வெளிக்கொண்டு வருவது ஒரு படிப்படியான செயல்முறை என்பதை மறந்து விடாதீர்கள். குழு முயற்சியாக இதனை செயல்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள அனைவரையும் இதில் ஒரு அங்கமாக இருக்க ஊக்குவியுங்கள்.

ஒரு திட்டம் தீட்டி, அதனை படிப்படியாக செயல்படுத்துங்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதாக நீங்கள் உணர்ந்தால், இத்துறையில் உள்ள வல்லுனர்களிடம் இருந்து தொழில் ரீதியான உதவியைப் பெற்றிட தயங்காதீர்கள். கேட்ஜெட் பயன்பாட்டில் இருந்து எப்படி குழந்தைகளை மீட்பது என அவர்கள் உங்களுக்கு அறிவுரைகள் கூறுவதன் மூலம் உங்களை சிறப்பான வழியில் வழி நடத்துவார்கள்.

உங்கள் குழந்தைகள் எப்போதும் கேட்ஜெட்டுடன் நேரத்தை செலவழிக்கிறார்கள் என குறை கூறுவதற்கு முன்பாக, அதற்கான காரணங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை கவனிக்க முடியாத காரணத்தினால் அவர்களிடம் கேட்ஜெட்டை கொடுத்து கெடுக்கும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருந்து விடாதீர்கள். நாளடைவில், உலகத்தின் நிஜத்தில் இருந்து தப்பிக்க குழந்தைகள் இதனை ஒரு வழியாக பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்

 

உங்கள் குழந்தைகளை வெளியில் சென்று விளையாட ஊக்குவியுங்கள். இது அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும், குறிப்பாக அவர்கள் கூட்டமாக விளையாடும் போது. மேலும், வேலையில்லாமல் கேட்ஜெட்டை வைத்துக் கொண்டு உட்காருவதற்கு பதிலாக, அவர்கள் மனது உருப்படியான விஷயத்தில் கவனத்தை திருப்பச் செய்யும்.
 

தங்களது படிப்பு மற்றும் செயற்திட்டங்களை பராமரிக்க பெரிய குழந்தைகளுக்கு அதிக நேரம் தேவைப்படும். அதனால் அன்றாடம் கேட்ஜெட் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்கிக் கொள்வது நல்லது. வெறுமனே கார்டூன் பார்ப்பது, அரட்டை அடிப்பது அல்லது கேம்ஸ் விளையாடுவது போன்ற காரியங்களுக்கு மட்டுமே கேட்ஜெட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

 

கேட்ஜெட்களுக்கு அடிமையாகியிருக்கும் குழந்தைகளை என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதோ ஒரு சுவாரசியமான தகவல். அவர்களுக்கு கணினியில் சீட்டு விளையாட்டு அல்லது செஸ் விளையாட்டு மீது ஈடுபாடு என்றால், அவர்களுக்கு அத்தகைய உண்மையான விளையாட்டை வாங்கிக் கொடுத்து, அவர்களுடன் விளையாடவும் செய்யுங்கள். இது கணினியின் மீதான அவர்களின் விருப்பத்தை திசை திருப்பி, நிஜ உலகத்திற்குள் குதூகலத்துடன் நுழையச் செய்யும்.
ஓய்வு நேரம் கிடைப்பதால் தான் குழந்தைகள் அதிக நேரம் கேட்ஜெட்டுடன் செலவழிக்கிறார்கள். இந்த பழக்கத்தை மாற்ற ஒரு சுவாரசியமான ஐடியா – சில பொழுதுபோக்குகளை வளர்த்து விடுங்கள். அது எவ்வளவு எளிதாக மற்றும் சிறுப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் பரவாயில்லை. அஞ்சல் முத்திரை சேகரிப்பு, நாணயம் தொகுப்பு அல்லது தோட்டக் கலை போன்ற பழக்கங்களை ஊக்குவியுங்கள்.

 

புதிதாக எதையாவது கற்றுக்கொள்வது மூளையை முனைப்புடன் வைத்துக் கொள்ள சிறந்த ஐடியாவாக இருக்கும். அதனால் நீச்சல், அல்லது புதிய விளையாட்டு, புதிய மொழி, மேஜிக், இசைக்கருவிகள் அல்லது நடனம் போன்ற புது விஷயங்களை உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுங்கள்.

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் குழந்தைகளை சுற்றுலா அல்லது ட்ரெக்கிங் போன்றவைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தைகளை இயற்கையுடன் நேரத்தை செலவழிக்க வையுங்கள். நிஜ உலகத்திற்குள் உங்கள் குழந்தைகளை கொண்டு வருவதற்கு இது சிறந்த வழியாக இருக்கும். பூங்கா அல்லது கடற்கரை போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்வது, உங்கள் குழந்தைகளை இன்னமும் முனைப்புடன் வைத்திருக்க செய்யும்.

Leave a Reply