shadow

சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோக்கள்: கேரள அரசு முடிவு

சாக்கடையை மனிதர்கள் மட்டுமே சுத்தம் செய்து வந்த நிலையில் கேரள அரசு புதிய முயற்சியாக இதற்கு ரோபோவை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அடிக்கடி விஷவாயுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கேரள நீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஷைனமோல் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகரின் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ஜென்ரோபோடிக்ஸ் வகையிலான ரோபோக்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இதையடுத்து அடுத்த வாரம் ரோபோக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தினால் கேரள அரசாங்கம் மிகவும் உற்சாகமாக உள்ளது. இந்த ரோபோக்களில் வை-பை,ப்ளூடூத் முதலிய வசதிகள் அடங்கிய கட்டுப்பாட்டு கருவி நான்கு மூட்டுகளிலும் இணைக்கப்பட்டிருக்கும்.மேலும் கழிவுநீர்களை அகற்ற வாளி போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் கசிவு மற்றும் அக்கழிவுகளை மனிதர்கள் துப்புரவு செய்வதை மாற்றியமைக்கும் முயற்சியில் கேரள நீர் வாரியத்துடன்,கேரள ஸ்டார்ட் அப் மிஷன் நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான நிதி அளிக்க தயாராகவுள்ளதால் அடுத்த வாரம் ரோபோக்கள் சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்படும்.திருவனந்தபுரத்தில் 5000க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் இந்த ரோபோக்களுக்கு ‘பண்டிகூட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் ஜென்ரோபோடிக்ஸ் வடிவமைப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் விஷ்ணு கோவிந்த் கூறுகையில்,

“இந்த ரோபோ 7-8 மாதங்களில் வடிவமைக்கப்பட்டது.சமீபத்தில் பல்வேறு பொறியியல் துறையைச் சேர்ந்த ஒன்பது இளைஞர்களுடன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.அப்பொழுது மருத்துவக்கல்லூரியின் அருகே 30 கிலோ குப்பைகளை அகற்றிய ரோபோ துணிகள், பிளெடுகள் முதலிய பிறப்பொருட்களை பிரித்து எடுத்தது வியப்பாக இருந்தது.இதனால் மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலை மாறும்”என கூறினார்.

Leave a Reply