y1

கல்வி இருக்குமிடத்தில் செல்வம் இருக்காது. செல்வம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. அதாவது… கலைமகள் இருக்கும் இடத்தில் அலைமகள் இருக்கமாட்டாள் அலைமகள் இருக்கும் இடத்தில் கலைமகள் இருக்கமாட்டாள்! பெரும் தமிழ்க்கவிஞர்கள் எல்லாம் சாப்பாட்டுக்கே திண்டாடிய கதையை அறிந்தால் இது உண்மை என்பது புலப்படும். தமிழ் வளர்த்த அந்த புலவர்களில், பலரது பெயர்கள்கூடத் தெரியாமல் போய்விட்டன. தெரிந்த புலவர்களின் பாடல்களும் அர்த்தம் தெரியாததால், அநாதைகளாகிப் போய்விட்டன. அப்படி அந்த புலவர்கள் எல்லாம், தாம் வறுøயில் நாடி உருக்குலைந்து போனாலும், தங்கள் தமிழைத் துருப்பிடிக்க விடவில்லை. அவர்களில் ஒருவர் தன்னுடைய நிலையை வெளிப்படுத்திய பாடல் இது. இந்திரனில் ஆரம்பித்து, குபேரனில் முடித்திருக்கிறார் பாடலை!

இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான். அதாவது, இந்திரன் என் இடுப்பில் ஆடையாக இருந்தான் என்கிறார் புலவர். இந்திரன் இவ்வாறு ஆடையாக மாறி அடுத்தவரை அலங்கரித்ததாக இதிகாச-புராணங்கள் எதிலும் இல்லை. பிறகு புலவர் ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும். கவுதம முனிவரின் சாபத்தின் காரணமாக இந்திரனுக்கு உடம்பில் ஆயிரக்கணக்கான கண்கள் இருந்தன. அதனாலேயே அவனுக்கு ஸகஸ்ராட்சன் என்ற பெயரும் உண்டு. அவன் வந்து எனக்கு ஆடை (வேட்டி)யாக இருந்தான் என்றால்… எனது வேட்டியிலும் ஆயிரம் கண்கள் (ஓட்டைகள்) உள்ளன. அதாவது பீற்றல் வேட்டி என்கிறார் புலவர்! அடுத்து… துணிக்கே வழியில்லாதபோது, சோற்றுக்கு எங்கே போவது? ஜீரணம் செய்வதற்கு ஏதுமில்லாததால், அக்னி பகவான் என் வயிற்றில் எரிந்துகொண்டிருக்கிறான் என்கிறார்.

தொடர்ந்து அவர், இவ்வாறு துணிக்கும் சோற்றுக்கும் வழியில்லாமல் திரியும் என்னிடம் யமன் கூடப் பக்கத்தில் வர மாட்டான் என்கிறார். அந்த புலவரைப் பார்த்ததும், சிவபெருமான் பிட்சாடன மூர்த்தியாக வருவதைப் போல இருக்கும். ஏற்கனவே மார்க்கண்டேயனைப் பிடிக்கப் போய், சிவபெருமானிடம் உதைபட்டது அவனுக்கு நினைவுக்கு வராதா என்ன? அந்த எண்ணத்தில்தான் யமன் கூட அருகில் வரமாட்டான் இந்த நிலையில் நிருதி-வாயு பகவான்தான் (தென்மேற்கு திசைக்கு அதிபதி) என்னிடம் வந்து, என்ன செய்யப் போகிறான்? வரமாட்டான்! உடல்மெலிந்து உள்ளம் உடைந்து இருக்கும் தன் பக்கம் காற்று கூட வீசாது என்கிறார் புலவர். வருணனோ என் இருக் கண்களையும் விட்டு அகலாமல் இருக்கிறான் என்கிறார். அதாவது அவர் கண்களில் இருந்து எப்போதும் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது என்பது பொருள். இப்படிக் கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தால், கட்டிய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பசிக்காதா என்றால்… நானும் என் மனைவி- மக்களும் காற்றையே உணவாகக் கொள்கிறோம் என்கிறார் புலவர். அதாவது, உண்ண ஏதுமில்லை என்பது பொருள்.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எனக்கு இணையாக, இந்த உலகில் யார் இருக்கிறார்கள்? என்று கேட்பவர், எப்போதும், இப்படி பெருமைகளை வரிசையாகப் பெற்று தரித்திர ராஜனைத் தலை வணங்கி நிற்கும் என்னைக் காப்பாற்றவேண்டியது, மன்னா… உனது பொறுப்பு. அதைச் செய்தால், உன்னை ஈசனாகவே நினைப்பேன் என்று பாடலை முடிக்கிறார் புலவர். திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியை நேருக்கு நேராகத் தரிசித்தவர், தமிழ் புலவர்களில் எமகண்டம் பாடிய ஒரே புலவர்… கவிராஜ காளமேகம்!

அவர் எழுதிய அந்தப் பாடல்…

இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான்
அக்கினி உதரம் விட்டு அகலான்
எமன் எனைக்கருதான் அரன் எனக் கருதி
நிருதிவந்து என்னை என் செய்வான்
அந்தமாம் வருணன் இருகண் விட்டு அகலான்
அகத்துறு மக்களும் யானும்
அனிலமதாகும் அமுதினைக் கொள்வோம்
யார் எனை உலகினில் ஒப்பார்
சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத்
தரித்திர ராசனை வணங்கித்
தலை செயும் என்னை நிலை செய் கல்யாணிச்
சாளுவத் திருமலைராயன்
மந்தர புயனாங் கோப்பய னுதவு
மகிபதி விதரண ராமன்
வாக்கினால் குபேரனாக்கினால் அவனே
மாசிலா ஈசனாவானே

இந்தப் பாடலில், அஷ்டதிக்குப் பாலகர்கள் எண்டிசைக் காவலர்கள் எனப்படும் எட்டு பேர்களின் பெயர்களைச் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர்களை, அறிவாளிகளை, கல்விமான்களை ஆதரிக்காத நாடு, எந்த வகையில் முன்னேறியிருந்தாலும் அது முன்னேற்றம் ஆகாது. ஆதரிக்க வேண்டியது அரசனின் கடமை. இந்தக் காலத்தில் அரசர்கள் ஏது? எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதற்கு ஏற்ப, நல்லோரை ஆதரிப்பது, நம் எல்லோரது கடமையும் ஆகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *