shadow

kaththi-release-in-troubleவிஜய் நடித்துக்கொண்டிருக்கும் ‘கத்தி’ படத்திற்கு சீமானின் நாம் தமிழர் மற்றும் ஒருசில அமைப்புகள் ஆதரவு கொடுத்துவிட்டாலும், இன்னும் பல தமிழ் அமைப்புகள் ‘கத்தி’ படத்திற்கு எதிராக காய்களை நகர்த்திக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. நேற்று சென்னையில் 65 அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டத்தில் கத்தி திரைப்படத்திற்கு எதிராக கடைசி வரை போராடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த கூட்டத்திற்கு பின்னர் 65 அமைப்பு தலைவர்களும் கூட்டாக விடுத்த அறிக்கை ஒன்றில், “இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகியோர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றையே குறிக்கோள் கொண்டுள்ளனர் என்றும் தமிழ் இனத்தை வேரறுத்த ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கும் ‘கத்தி’ படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த படத்தை வேறொருவர் வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், ஏனெனில் லைகா நிறுவனத்தார் கண்டிப்பாக இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்றும் கூறிய அந்த அமைப்புகள் படம் கைமாறுவதாக திசை திருப்பும் நாடகம் நடத்துகின்றனர் என்றும் இந்த நாடகத்தை கண்டு ஏமாந்து தங்கள் போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

நேற்று மாலை விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஆகியவை இணைந்து கத்தி படத்தை வாங்க முயற்சிப்பதாக வந்த தகவலை அடுத்து ‘கத்தி’ பிரச்சனை முடிந்துவிட்டது என்று விஜய் ரசிகர்கள் ஆறுதலடைந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால்  அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் கத்தி படத்திற்கு எதிராக நேற்று இலங்கை தூதரகம் அருகே போராட்டம் நடத்திய புரட்சி பாரதம் இயக்கத்தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறுகையில், “உண்மையில் விஜய் மற்றும் முருகதாஸ் ஆகிய இருவரும் தமிழர்களாக இருந்தால் இந்த படத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர்கள் தமிழர்கள் இல்லை என்று ஒப்புக்கொண்டால் தாராளமாக இந்த படத்தில் பணியாற்றலாம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply