shadow

1915838_10206250336881565_1834519362883406776_n

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந் தாள்.பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான். பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள், பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து, என்றார்.பக்தன் அவரிடம்,பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை என்ற குறையுடன் இங்கு வந்துவிட்டேன், என்றான்.அப்படியா! வைகுண்ட பதவியே பெறுமளவு தகுதி பெற்ற உனக்கு குறையேதும் இருக்கக்கூடாதே, சொல்…சொல்..உடனே தீர்த்து விடுகிறேன், என்றார். ஐயனே! நான் உலகில் வாழ்ந்த காலத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற சர்ச்சையையே மக்கள் மத்தியில் அதிகம் பார்த்தேன்.
பூலோகத்தில் கடல், மலை என்றெல்லாம் பெரிது பெரிதாக இருக்க, இந்த மக்கள் தாங்களே பெரியவர்கள் என்று புகழ்ந்து கொள்கிறார்களே! உண்மையைச் சொல்லுங்கள். பூலோகத்தில் உயர்ந்தவர் யார்? என்றான்.பெருமாள் சிரித்தார். பக்தனே! மக்கள் சொல்வது போல கடலும், மலையும் பெரிது தானே! என்றார். சுவாமி! உங்கள் கருத்துக்கு என்னிடம் விடை இருக்கிறது.கடலையே வாரிக் குடித்து விட்டார் குள்ள முனிவரான அகத்தியர். புராணங்களில் இதைப் படித்திருக்கிறேன். கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார் தங்கள் மருமகன் முருகப்பெருமான்.நிலைமை இப்படியிருக்க, இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்! பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன. எனவே, பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை.பகவனாகிய தாங்களே பெரியவர், என்றான். இல்லை…இல்லை… நீ சொல்வது சரியல்ல. உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்! அவர்களில்யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ, என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்று பதிலளித்தார் பெருமாள்.
எப்படி? என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், தாங்கள் சர்வ வியாபி.வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள். விண்ணை ஓரடியால் அளந்து உலைகையே வசமாக்கிக் கொண்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் தானே உயர்ந்தவராக இருக்க முடியும்? என திருப்பிக்கேட்டான். உடனே பெருமாள் ஒரு தட்டொளியை (தேவலோகக் கண்ணாடி) எடுத்து வரச்சொன்னார். அதன் முன்னால், அந்த பக்தனை நிறுத்தச் சொன்னார்.பக்தனே! அந்தக் கண்ணாடியில் உன் மார்பைப் பார், என்றார். பக்தன் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஏனெனில், பகவான் அவனது மார்புக்குள் சிறுஅளவில் குறுகி நின்றார். பார்த்தாயா! உலகையே அளந்த என்னை, உன் பக்தியால் உன் கையளவு இதயத்துக்குள் கட்டைவிரலளவாக மாற்றி வைத்துக் கொண்டாயே! எனவே நீ தான் பெரியவன், என்றார். பக்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாமும் இறைவனை நம் இதயத்துக்குள் நிறுத்துவோம். அவனருள் பெற்று பிறப்பற்ற நிலையை அடைவோம்.

Leave a Reply