kashi viswanath temple_0 

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

 இந்த கோயிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோயிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப் பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோயில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.

 இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். விசுவநாதர் கோயில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

 கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோயிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோயிலும், விசாலாட்சி கோயிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோயில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

kashi

 தலபெருமை:

இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.

 தீர்த்தக் கட்டங்கள்: கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும்.இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.

மகாராஜா ரஞ்சித்சிங் கோயிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். காசியில் மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றுமே அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே சூட்டப்பட்டது. பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம். ஏனெனில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் ஆகும். கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய ஸ்தலம் இது. காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.      (தொடரும்)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *