எனது உயிர் போனால்தான் காஷ்மீர் பிரச்சனை தீரும் என்றால் உயிர்த்தியாகம் செய்யத்தயார் என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் நிறுத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து அம்மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கவுசாம்பி என்ற இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை இந்து ரக்ஷாதள் என்ற அமைப்பை சேர்ந்த 60 பேர் கொண்ட கும்பல் பயங்கரமாக தாக்கியது.
தமது கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ‘பிரசாந்த் பூஷனின் கருத்து அவரது சொந்த கருத்துதான், கட்சியின் கருத்து அல்ல. இதுபோன்ற வன்முறை தாக்குதலுக்கு ஆம் ஆத்மி கட்சி அஞ்சாது. என்னையும், பிரசாந்த் பூஷணையும் கொன்றால்தான் காஷ்மீர் பிரச்சனை தீரும் என்றால் நாங்கள் உயிர்த்தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்’ என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆம் ஆத்மியின் நாடு தழுவிய வளர்ச்சியை பிடிக்காமல் பாரதிய ஜனதவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்துதான் இந்த தாக்குதல் சதியை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply