shadow

இன்றைய சூழலில் பொருத்தமான பேச்சு. ரஜினிக்கு மு.கருணாநிதி ஆதரவு
rajinikanth
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது என்று கூறி இருந்தார். ரஜினியின் பேச்சு ஆழமான அர்த்தச் செறிவான பேச்சு என்றும் இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சாகும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் நினைவு தபால்தலை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்குரைஞர்கள் நிறைந்திருந்த சபையில் ரஜினிகாந்த் பேசும்போது, “நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது’ என்று பேசியுள்ளார். அவருடைய இந்தப் பேச்சு ஆழமான அர்த்தச் செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சாகும்.

அண்மைக் காலத்தில் நீதிமன்றங்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் பரவலாக எதிர்மறைக் கருத்துக்கள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் வரத் தொடங்கி விட்டன. செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வளர்ந்து வருகிறது; இதற்கான சான்றுகளும் வளர்ந்து வருகின்றன. எவ்வளவு கடுமையான வழக்குகளாக இருந்தாலும், சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி, விருப்பம்போல் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் இழுத்தடிக்கலாம்; சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதைச் சிறிது சிறிதாக நீர்த்துப்போகச் செய்யலாம்; கூட்டல், பெருக்கல் கணக்குகளிலே கூட சரியான விடை ஒன்றே ஒன்றுதான் என்பதைத் திரித்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விடையளிக்கலாம்; வங்கிகளில் இருந்து பெறக்கூடிய கடன்களை ஒருவருடைய வருமானமாகக் கருதி, கடனுக்கும் வருமானத்திற்கும் உள்ள வேறுபாட்டை அகற்றலாம்; உச்ச நீதிமன்றம் பல்வேறு பிரச்னைகளில் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளை, காலத்திற்கேற்பவும் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்பவும் மாற்றியமைத்துக் கொள்ளலாம்; என்பன போன்ற கருத்துச் சிதைவுகள் வேகமாகப் பரவி வரும் இந்நாளில், ரஜினிகாந்த், வெளிப்படையாக மனம் திறந்து சொல்லி இருக்கும் இந்தக் கருத்து, ஜனநாயகத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கதே ஆகும்’ என்று கூறியுள்ளார்.

கருணாநிதியின் இந்த கருத்து சமீபத்தில் வெளியான ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டுவதாகவும், ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் இந்த கருத்தை தெரிவித்தது போன்ற ஒரு பிரம்மையை உண்டாக்க கருணாநிதி முயற்சி செய்வதாகவும் பலர் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். 2ஜி வழக்கின் தீர்ப்பு கருணாநிதியின் குடும்பத்தினர்களுக்கு எதிராக வந்தால் இதே கருத்தை கருணாநிதி ஆதரிப்பாரா? என்றும் பலர் டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply