shadow

இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!
modi
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விரைவில் இந்திய சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். டெல்லி வரும் இலங்கை அதிபரோடும், பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தையின்போது, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமரை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை பிரதமராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருவதையொட்டி, இந்த கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன்.

இந்த மாத மத்தியில் ரணில் விக்ரமசிங்கேவும், அக்டோபர் மாதத்தில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் டெல்லிக்கு வருகை தரவுள்ளார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழர்களுடைய பிரச்னைகளுக்கு நிரந்தரமானதொரு தீர்வு காண வேண்டுமென்று 1956ஆம் ஆண்டிலிருந்தே திமுக குரல் கொடுத்து வருவதை தாங்கள் அறிவீர்கள். எனவே இலங்கைத் தமிழர்களுடைய மனக் குறைகளைத் தேவையான போதெல்லாம் உரிய அரங்குகளில் தகுந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான கடமை எனக்கு உண்டு.

இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் கருத்திலே கொண்டு, இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை நடுநிலையோடு ஆய்வு செய்து, இலங்கைத் தமிழர்களின் நெடுங்கால எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலகச் சரித்திரத்தில் தனித்தன்மை வாய்ந்த மாபெரும் தேசிய இனம் ஒன்றுக்கு நேர்ந்த சுய மரியாதையற்றதும், கண்ணியக் குறைவானதுமான நிகழ்வுகள் அனைத்தையும் துடைத்தெறிய கருணையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான அணுகுமுறையினை தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று இங்குள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும் நன்றியுணர்வோடு தங்களைக் கேட்டுக் கொள்கிறார்கள்.

தாங்கள் இலங்கை அதிபரோடும், இலங்கை பிரதமரோடும் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் ஊக்கம் அளித்திடும் விளைவுகளுக்கு வித்திடும் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்”

இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

Leave a Reply