shadow

Ghatotkacha

பாரதப்போரின் உச்சக்கட்டம். குரு÷க்ஷத்திர களத்தில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. தர்மதேவதை தன் நிலையை குறித்து அழுது கொண்டிருந்தாள். எத்தனை பேர் வந்தாலும், அள்ளி அள்ளி கொடுத்த கர்ணனை இந்த உலகில் வாழ வைத்தே ஆக வேண்டும் என்ற நிலை அவளுக்கு. அவள் தெய்வங்களை எல்லாம் துதித்தாள். இவன் செய்த தர்மங்கள் ஏராளம். தர்மம் தலைகாக்கும் என்பது உண்மையானால் இவன் இந்த பூமியில் இன்னும் வாழ வேண்டும், என துதித்துக் கொண்டிருக்கும் போதே சூரியன் மேகத்திற்குள் மறைந்தான். சூரிய பகவானே! உலகையே வாழ வைக்கும் நீ, உன் சொந்த மகனை, நீ பெற்ற மகனை கை விட்டு விட்டாயே! ஒரு கோழையைப் போல மேகத்திற்குள் உன்னை மறைத்துக் கொண்டாயே? தர்மம் செய்பவர்கள் அழிந்து போக நீ உடந்தையாக இருக்கலாமா? உன் மகனின் அழிவுக்கு காரணமானவர்களை நீ சுட்டெரிக்க வேண்டாமா? அவள் புலம்பித் தள்ளினாள். அர்ச்சுனன் இந்த நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உள்ளுக்குள் பொறாமை. எனது எதிரிக்கு இவ்வளவு புகழ் மாலையா?  நான் எத்தனை பேரை அடித்து நொறுக்கி இருக்கிறேன். நான் வில்லெடுத்தால், உலகமே அஞ்சி நடுங்குகிறது. இருப்பினும் எனக்கு இல்லாத பெயரும், புகழும் போர்க்களத்திலே அடிபட்டு, சாகக் கிடக்கிறவனுக்கு கிடைக்கிறது. அவனது முக பாவத்தைக் கொண்டே, அவனது எண்ண ஓட்டத்தை யூகித்துக் கொண்டார் கிருஷ்ண பரமாத்மா. பார்த்தீபா! உன் பாணங்கள் முழுவதையும் கர்ணன் மீது எய்து விட்டாய். உன்னுடைய ஒரு பாணமே, மற்றவர்களின் உயிரைக் குடித்து விடும் போது, கர்ணனின் உடம்பெல்லாம் பாணத்தை எய்தும், தர்மம் அவனைக் காத்து நிற்கிறதே என எண்ணுகிறாய். சற்று பொறு. அவனது தர்மம் செய்யும் தன்மையை உனக்கு காட்டுகிறேன், என்றவர் அந்தணர் உருவமெடுத்தார்.

கர்ணன் அடிபட்டு கிடந்த இடத்துக்கு வந்தார். தர்ம தேவதை அவரை கைகூப்பினாள். அவளுக்கு அந்தணர் வேடத்தில் வந்திருப்பது யாரென புரிந்து விட்டது. இந்த மாயக்கண்ணன் ஏதேனும் உபாயம் செய்து, கர்ணனைக் கொன்று விடுவாரே, என்று மட்டும் அவள் மனதில் பட்டது. கண்ணன் அவளைச் சமாதானம் செய்தார். இன்றில்லா விட்டாலும் உன் கர்ணன் என்றாவது ஒருநாள் இறந்து தானே அம்மா ஆக வேண்டும். அவன் இறந்தாலும் அவன் புகழ் என்றும் இறவாதபடியும், தர்மதேவதையான உன் புகழ் இந்த பூமியில் என்றும் நிலைத்திருக்கவும் அருளாசி தருகிறேன், என்றதும், தாங்களே முடிவு செய்த பிறகு என்னால் ஆனது ஏதுமில்லை. ஆனாலும் இவன் செய்த தர்மத்தின் புண்ணியம் இவனை விட்டு நீங்கும் வரை இவன் உயிர் பிரியாமல் இருக்க வரம் தர வேண்டும், என்றாள். கண்ணனும் அவ்வாறே அருளினார். தர்மதேவதை கண்ணீருடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள். பின்பு கண்ணன், காயத்தால் துன்பப்பட்டு கொண்டிருந்த கர்ணனின் அருகில் சென்றார். அவனை உற்றுப் பார்த்தார். அந்தண வேடத்தில் வந்த கண்ணனுக்கு கர்ணன் அந்த வேதனையிலும் கைகூப்பினான். கர்ணா! நீ இருக்கும் நிலைமையும், இருக்கும் இடமும் சரியில்லை தான். இருப்பினும் எனக்கு பெரும் பசி எடுக்கிறது. நீ ஏதாவது கொடுத்தால் என் பசியும், என் குடும்பத்தாரின் பசியும் நீங்கும், என்றார். அந்தணரே! என்னிடம் எதுவுமே இல்லையே! நீர் கேட்டும் கொடுக்க முடியாத பாவியாகி விட்டேனே! இதற்காக என்ன பாவத்தை அனுபவிக்க போகிறேனோ? என்றான் கர்ணன்.

Death_of_Karna

அந்தணருக்கு கோபம் வந்து விட்டது. என்னிடமே பொய் சொல்கிறாயா? உன்னிடம் ஏதோ ஒன்று இருப்பதாக என் உள்ளுணர்வு சொல்கிறது. உண்மையைச் சொல், என்றார். கர்ணன் சற்றுநேரம் சிந்தித்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்தணரே! நீர் நினைத்தது சரிதான். உமக்கு என்னிடம் கொடுக்க இப்போதும் ஒரு பொருள் உண்டு. இதோ! எனது ஒரு பல்லில் கொஞ்சம் தங்கம் இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளும், என்றான். அந்தணர் இன்னும் கோபப்பட்டார்.  அந்தணனான நான் உன் பல்லில் கையை வைப்பதா? அதை நீயே எடுத்துக் கொடு, என்றார். கர்ணன் தன் சக்தியை எல்லாம் திரட்டி, அந்த பல்லை அசைத்தான். அது தனியாக வந்தது. அதை அவர் கையில் கொடுத்தான். அந்தணர் வாங்க மறுத்து விட்டார். கர்ணா! நீ தர்மம் செய்யும் அழகு இதுதானா? ரத்தம் தோய்ந்த பல்லைøயா அந்தணருக்கு கொடுப்பார்கள். எனக்கு உன் பல் தேவையில்லை. அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் தங்கம் தான் தேவை, என்றார். கர்ணன் தன் உடலில் இருந்த ஒரு அம்பை உருவினான். அதன் முனையால் தங்கத்தை உரசி எடுத்தான். அந்தணரிடம் அன்போடு கொடுத்தான். அந்த தங்கத்தில் உள்ள ரத்தத்தை மட்டும் அவனால் கழுவ முடியவில்லை. போதாக்குறைக்கு அவன் கையில் உள்ள ரத்தமும் சேர்ந்து, தங்கத்தை சிவப்பாக்கியது. அந்தணரே! இதையாவது பெற்றுக் கொள்ளுங்கள். இதை துடைத்து விட்டால் சுத்தமான தங்கம் கிடைத்து விடும், என்றான்.  அந்தணர் இன்னும் முகத்தை கடுமையாக்கி கொண்டு சிடுசிடுத்தார். இதை எதில் துடைப்பேன். நான் அணிந்திருப்பதே கந்தல் ஆடை. இதில் உன் ரத்தத்தை துடைத்து, இதையும் கிழித்து போடுவதா? என்றார் காட்டமாக.

பகவான் இப்படித்தான் மனிதர்களை சோதிப்பார். நம் உடலில் நல்ல வலுவுள்ள நேரத்தில், கடவுள் நமக்கு சிறு கஷ்டங்களைக் கொடுத்தால் கூட, அவரை ஏக வசனத்தில் திட்டி தீர்த்து விடுவோம். ஆனால் கர்ணன் போர்க்களத்தில், யாருமற்ற அனாதையாய் சாகக் கிடக்கும் இந்த நேரத்திலும், அவனுக்கு வந்த சோதனைகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டான். அதேநேரம் கடவுள் ஏன் அவனுக்கு இப்படி துன்பத்தைக் கொடுத்தார்? அவன் நல்லவன் தான். ஆனாலும் கெட்ட சகவாசக்காரன். பாஞ்சாலியை துயிலுரியும் போது வேடிக்கை பார்த்தவன். எக்காளம் செய்தவன். அதற்குரிய தண்டனையைத் தான் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். தங்கத்தை வாங்க மறுத்த அந்தணரிடம் சற்று பொறுத்திருக்க சொல்லி விட்டு, கர்ணன் வலியையும் தாங்கிக் கொண்டு சற்று தூரம் ஊர்ந்தே சென்றான். அம்புகள் தந்த வலி தாங்க முடியவில்லை. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தனது வர்ணாஸ்திரத்தை தேடி கண்டுபிடித்தான். அதை வானத்தில் எய்தால் மழை கொட்டும். தோளில் தொங்கிய தனது வில்லை எடுத்து, கையின் மூட்டுப் பகுதியால் நாணை இழுத்து பிடித்தான். அம்பை நாணில் வைத்தான். வானத்தை நோக்கி செலுத்தினான். பெருமழை கொட்டியது. அதில் தங்கத்தை கழுவினான். தங்கம் சுத்தமானது. மஞ்சள் நிறத்தில் பளபளவென மின்னியது. அதை அந்தணரிடம் மனமுவந்து கொடுத்தான். கலங்கிப் போய் விட்டார் கண்ணன். அவன் அன்போடு கொடுத்த தங்கத்தை இரு கரம் கொண்டு வாங்கினார். அர்ச்சுனன் இருக்கும் இடத்திற்கு வந்தார். அவன் கண்ணீருடன் நின்றிருந்தான்.  கவனித்தாயா அர்ச்சுனா! கர்ணன் தர்மம் செய்வதில் எவ்வளவு வல்லவன் என்று. இந்த பாரதம் உன்னையும், என்னையும் கூட மறந்து போகும். ஆனால் கர்ணனை காலம் மறக்காது. அவனைப் போன்ற உத்தமர்கள் இனி இவ்வுலகில் பிறப்பதும் அரிதாகும், என்றார். இதனால் தான் கர்ணன் இன்றும் நம் மனதில் வாழ்கிறான்

Leave a Reply