shadow
கர்நாடக அரசு மீண்டும் மீண்டும் தவறு செய்கிறது. கனிமொழி
kanimozhiசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்காமல் கர்நாடக அரசு மீண்டும் மீண்டும் தவறு செய்கிறது என்று கனிமொழி எம்.பி. பேட்டி ஒன்றில் தெரிவித்துளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், திமுகவின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி எம்பி, திருவண்ணாமலையில் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும், தமிழத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்குவதில்லை; இது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த அரசாக இருந்தாலும் ஏற்று நடக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் தவறு செய்கின்றனர். தமிழகத்துக்கு தர வேண்டிய நியாயமான தண்ணீரைகூட கர்நாடக அரசு தர மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை குழுவை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய அமைச்சராக இருந்து கொண்டு ஒரு மாநிலத்திற்கான அமைச்சர் போல், கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த விவகாரத்தில், சதானந்த கவுடா ஒருதலைபட்சமாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்க வேண்டும். காவிரி பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply