shadow

112ஜி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவரும் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். ஆனால் தயாளு அம்மாள் இன்று ஆஜராக மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகிறார்.

டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் மற்றும் தயாளு அம்மாள் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தயாளு அம்மாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக செல்லவில்லை என்றும் அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தயாளு அம்மாள், கனிமொழி, ஆ. ராசா, ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கே. கோயங்கா, ஆசிஃப் பல்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, சரத் குமார், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி), குசேகான் ரியாலிட்டி (முன்பு குசேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ்), சினியுக் மீடி எண்டர்டெயின்மெண்ட் (முன்பு சினியூக் ஃபிலிம்ஸ்), கலைஞர் டிவி, டைனமிக்ஸ் ரியாலிட்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி, கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டெவலப்பர்ஸ், டிபி ரியாலிட்டி, நிஹார் கன்ஸ்டிரக்ஷன்ஸ் ஆகிய 9 நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற இருப்பதால் இவர்கள் அனைவரும் ஆஜராகின்றனர். இன்றைய விசாரணைக்கு பின்னர் கனிமொழி உள்பட அனைவரும் கைது செய்யப்படுவார்களா? என்ற பரபரப்பு நீதிமன்ற வளாகத்தில் இருந்து வருகிறது. இன்று பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில் கனிமொழி உள்பட இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply