shadow

8  பிறவிகளில் மானிடப் பிறவி மகத்தானது! மானிடனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற இறைத் தொண்டு செய்தும், இறை நாமத்தை ஜபித்தும் இறைவனின் பாதத்தை அடைய வேண்டும். சீர்படுத்தாமல் விடப்பட்ட சிவாலயங்களைச் சீர்படுத்திப் பராமரித்தும், சிவாலய குடமுழுக்குக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தும் சிவத் தொண்டு செய்து வருகிறார் கந்தசாமி சிவனடியார். ”கடந்த 37 வருடங்களாக இப்படிச் சிவத்தொண்டு செய்து வருவதை என் பிறவிக் கடமையாகவே நினைக்கிறேன்” என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் இவர்.

இடுப்பில் காவி வேஷ்டி, தோளில் துண்டு, கழுத்தில் ருத்திராட்சம், நெற்றியில் திருநீறு… இதுதான் கந்தசாமி சிவனடியாரின் தோற்றம். மாதச் சம்பளம் வந்ததும் முதல் வேலையாக கோயிலுக்கென எண்ணெய் பாக்கெட், ஊதுவத்தி, சூடம் என வாங்கி, பை பையாக எடுத்துக்கொண்டு, தனது டூ வீலரில் கோயில் கோயிலாகச் செல்கிறார்.

இவர் செல்லும் கோயில்கள் யாவும் வழிபாடுகளோ, ஒரு வேளை பூஜையோ நடைபெறாத, விளக்கேற்றக்கூட வசதி இல்லாத ஆலயங்கள்!

‘கோயில் ஒரு சுடுகாடு
கொல் புலித்தோல் நல்லாடை
தாயுமில்லை தந்தையுமில்லை
அவர் ஒரு தான்தோன்றியவன்

– என்ற மாணிக்கவாசகரின் கருத்துக்கள்தான் எனக்கு வழிகாட்டி.இறைவன் தந்த இந்த உயிரை, இந்த உடலை இறைவனுக்கே அர்ப்பணித்து, தொண்டு செய்து, இறைவனின் பாதத்தை அடைய வேண்டும். அதற்காகத்தான் சதா சர்வ காலமும் சதாசிவத்தையே, தென்னாடுடைய சிவனையே நினைச்சுக்கிட்டிருக்குது என் மனசு” என்கிறார் கந்தசாமி சிவனடியார்.

8aதிருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அத்தனை சிவனடியார்களுக்கும் கந்தசாமியின் தொண்டும் இறைநாட்டமும் தெரிந்திருக்கிறது. எனவே, எங்கேனும் சிவாலயம் சிதிலமடைந்தோ, பராமரிப்பின்றியோ இருந்தால், உடனே கந்தசாமிக்குத் தகவல் வந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து, நண்பர்களின் உதவியுடனும், அந்த ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும் கோயிலைப் புனரமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிடுவார் கந்தசாமி. தன் 12-வது வயதில் இருந்து இறைத் தொண்டு செய்து வரும் கந்தசாமி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிகிறார்.

”எனக்குச் சொந்த ஊர், திருச்சி பக்கத்துல உள்ள லால்குடிதான். அங்கே, என் சின்ன வயசுல, கோயில்ல ஸ்வாமி புறப்பாட்டின் போது, அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வார் அப்பா வைத்தி லிங்கம். அப்பா  பக்கத்துல நின்னுக்கிட்டு அத்தனை விஷயங்களையும் உன்னிப்பா பார்த்துக்கிட்டே இருப்பேன். அதுதான் என்னையும் அப்பாவைப் போலவே கடவுள் பணிக்குத் தள்ளிக்கொண்டு வந்து விட்டிருக்குன்னு தோணுது.

சின்ன வயசுலயே, ஊரைச் சுத்தி இருக்கிற சிவன் கோயில்களுக்குப் போய், உழவாரப் பணிகள் செய்வோம். அன்னிக்கு சிறிய அளவில செஞ்ச உழவாரப் பணி, இப்ப கோயில் திருப்பணி, கும்பாபிஷேக விழானு ஆகியிருக்கு. அவ்ளோதான்!” என்று மலர்ந்த முகத்துடன் சொல்கிறார் கந்தசாமி சிவனடியார்.  

”சிதிலம் அடைந்த கோயிலைப் பற்றி அன்பர்களும் நண்பர்களும் சொல்லுவாங்க. உடனே, அந்தக் கோயில் பத்தின புராண- புராதன விஷயங்களைச் சேகரிப்பேன். பிறகு ஊர்மக்கள்கிட்ட, ‘உங்க ஊர்ல இப்படி சிதிலம் அடைஞ்சிருக்கிற கோயிலோட பெருமைகள் தெரியுமா?’னு கேட்டு, எல்லாத்தையும் விவரமா, விளக்கமா சொல்வேன். கடவுளுக்குத் தொண்டு செய்வது பத்தியும், அதனால நம்ம வாழ்க்கைல ஏற்படக்கூடிய நல்ல நல்ல மாற்றங்கள் பத்தியும் சொல்வேன்.

8cதிருப்பணிக்கு நன்கொடை தரும் சிவநேசச் செல்வர்களை ஊர் ஊராத் தேடிப் போய், கோயில் பத்தி சொல்லி, நிதி திரட்டி, திருப்பணி வேலைகளைத் தொடங்குவோம். சனி, ஞாயிறு, கல்லூரி விடுமுறைன்னு எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ, அந்த நேரம் மொத்தமும் சிவபெருமானுக்குத்தான்! ஒரு கோயிலை எடுத்துக்கிட்டு திருப்பணிகளைத் தொடங்கினோம்னா, அதிகபட்சம் ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்திடுவோம்” என்கிறார் கந்தசாமி. இவரின் தன்னலமற்ற தொண்டுள்ளத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் பலர், இவரின் இறைப் பணிக்குக் கணிசமாகவே உதவி செய்து, ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

 திருச்சி அருகே உள்ள களமாவூரில், பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீஅக்னீஸ்வரர் என்ற நாமத்தை சூட்டி, அங்கே ஒரு கோயிலையும் கட்டியுள்ளார் கந்தசாமி சிவனடியார். தினமும் இங்கே பூஜைகள் செய்து, இங்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மிகக் கதைகள் சொல்லி வருகிறார்.

”குறிப்பா,  கோயில் பற்றிய பெருமைகளைச் சொல்லி, கோயிலை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும், எதற்காகப் பாதுகாக்க வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்லி வருகிறேன். சிவாகமப் பயிற்சிக்குச் செல்லும் மாணவர்கள் பலரின் செலவை நானே ஏத்துக்கறேன். தவிர, ஒவ்வொரு கோயிலுக்கும் 3 கிலோ எண்ணெய், திரி, தீப்பெட்டினு நண்பர்களின் உதவியோடு கொடுத்துட்டிருக்கேன். ஏதோ, என்னால முடிஞ்ச இறைத் தொண்டு!” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் கந்தசாமி சிவனடியார்.

Leave a Reply