காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள கழிவறையில் இருந்து நேற்று பகல் 11.45 மணிக்கு மாணவியின் அலறல் கேட்டது. பதற்றமடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அங்கு ஓடி சென்று பார்த்தனர். உள்ளே 6ம் வகுப்பு மாணவி சினேகா (11), உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் துடித்து கொண்டிருந்தாள். ஆசிரியர்கள் உடனடியாக தீயை அணைத்து, மாணவியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தந்தைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார்.  மாணவி சினேகா, காஞ்சிபுரம் அருகே அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கன்னியப்பன் மகள். தகவலறிந்து மனைவி தேன்மொழி, தம்பி குமார் மற்றும் உறவினர்களுடன் அவர் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு வந்தார். உடல் கருகிய நிலையில் இருந்த சினேகாவை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பழனி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், எஸ்ஐ நடராஜன், தாசில்தார் தங்கவேல் ஆகியோர் வந்து தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி எதற்காக தீக்குளித்தாள், பள்ளி அல்லது வீட்டில் பிரச்னையா என விசாரிக்கின்றனர். முன்னதாக, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மாணவியின் பை, தீக்குளிக்க பயன்படுத்திய கூல்டிரிங் பாட்டிலில் உள்ள ரேகையை பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் கல்வித்துறையும் விசாரணை நடத்த உள்ளது. இச்சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

மாணவியின் தந்தை கன்னியப்பன் கூறுகையில்: “இன்று காலை சினேகாவை ஆட்டோவில் ஏற்றி வந்து பள்ளியில் விட்டுவிட்டு சென்றேன். தினமும் ஆட்டோவில் ஏற்றி வந்து விட்டுவிட்டு செல்வேன். மதியம் 12 மணிக்கு எனக்கு போன் வந்தது. அதில் பேசியவர் உனது மகள் தீக்குளித்துவிட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே எனக்கு புரியவில்லை. பள்ளியில் ஏதோ பிரச்னை நடந்துள்ளது. அவளுக்கு கெரசின் கேன் எப்படி கிடைத்தது என தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்” என்றபடி கதறி அழுதார்.

சினேகாவின் தோழி அனுசுயா கூறுகையில: ”இன்டர்வெல் நேரத்தில் நானும் சினேகாவும் பாத்ரூம் சென்றோம். எல்லா மாணவிகளும் வகுப்பறைக்கு சென்ற பிறகு கடைசியாக சினேகா பாத்ரூம் சென்றாள். நான் வெளியே நின்றேன். திடீரென அவளது அலறல் கேட்டது. பயந்து போன நான் ஆசிரியர்களிடம் இதுபற்றி தெரிவித்தேன். அவர்கள் சென்று பார்த்தபோது தீயில் எரிந்த நிலையில் இருந்தாள்” என்றாள்.

வகுப்பு ஆசிரியர் கவிதா கூறுகையில்: “எனது வகுப்பில் 45 மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் நான் வேலைக்கு சேர்ந்து 3 ஆண்டுகள் ஆகிறது. பாடம் நடத்தி கொண்டிருந்தபோது வாந்தி வருவதாக சினேகா கூறினாள். பாத்ரூம் சென்றுவிட்டு வா என அனுப்பி வைத்தேன். ஆனால் அவள் தீக்குளித்தது வேதனையாக இருக்கிறது” என்றார்.

மாணவியின் சித்தப்பா குமார் கூறுகையில்: “சினேகா தைரியமான பெண். இரவில் கடைக்கு அனுப்பினால்கூட சென்றுவிட்டு வருவாள். வீட்டில் அவளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பள்ளியில் அவளுக்கு பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். அரசு பள்ளியில் போதிய பாதுகாப்பு இல்லை. இதுதொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியை ஜிக்கி கூறும்போது: “மாணவி சினேகா பள்ளிக்கு வரும்போதே பையில் கெரசின் கேனை எடுத்து வந்துள்ளாள். இதனால் வீட்டில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். பள்ளியில் அவளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த சம்பவத்தால் மாணவிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply