காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம் குறித்த முக்கிய தகவல்கள்

11நகரேஷு காஞ்சி என்றும் தொண்டை நாட்டு கோயில் நகரம் என்றும் ஞானநூல்கள் எல்லாம் போற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்களில் குறிப்பிடத்தக்கது, அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்.

ஆதி திருக்கோயில், நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள், அவற்றிலும் குறிப்பாக ஆயிரம் லிங்கங்களைத் தன்னகத்தே கொண்ட- ராமன் வழிபட்ட சகஸ்ரலிங்க தரிசனம், தழுவக் குழைந்த ஏகாம்பரநாதர், ஏலவார்க்குழலியம்மையுடன் சோமாஸ் கந்த வடிவில் காட்டும் அருட்கோலம், மாவடிக் கந்தன் தரிசனம், சோழர் காலத்து மண்டபங்கள், பாண்டியர் அளித்த இறையிலி, ராச நாராயண சம்புவராயன் எனும் மன்னன் கொடுத்த துலாபாரம் மற்றும் திருத்தேர், விஜயநகர மன்னர்கள் கட்டுவித்த சந்நிதிகள், ஹட்சன் பிரபு கட்டிய சுற்றுச் சுவர்… என புராணம் மற்றும் சரித்திர மகிமைகளையெல்லாம் தன்னகத்தே கொண்ட இந்தத் திருக்கோயிலுக்கு, மேலும் ஒரு சிறப்பு சேரவுள்ளது.

ஆம்! ஏகன் அநேகனாக அண்டபகிரண்டத் தையும் ரட்சித்து அருளும் ஏகாம்பரநாதருக்கு தங்கத்தேர் சமர்ப்பிக்கும் திருப்பணி துவங்கியுள்ளது. வெகுவிரைவில் தங்கத் தேரில் பவனிவரப் போகிறார், இக்கோயிலின் இறைவன். இதற்கான பணியை சிரமேற்கொண்டு செய்து வருகிறது, அருள்மிகு ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை.

பணிகளை ஒருங்கிணைத்து விரைவில் தங்கத் தேர்ப்பவனியை நடத்திவிடும் முனைப்புடன்செயல்பட்டு வருகிறார், அன்பர் நாகராஜ ஐயர். இவர், தமிழ்நாடு காவல்துறை சிறப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருப்பணிகள் குறித்து அவரிடம் பேசினோம்.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே காஞ்சிபுரம்தான். சின்ன வயசிலேர்ந்தே ஏகாம்பரேஸ்வரர்னா அத்தனைப் பிரியம். நான் பணி நிமித்தமா எத்தனையோ கோயில்களுக்குப் போய் வந்தது உண்டு. திருச்செந்தூர், பழநி முதலாக பல கோயில்களில் தங்கத் தேர் இருப்பதும், மிக மகிழ்ச்சியுடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பதையும் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன்.

அப்போது, நம்ம ஏகாம்பரேஸ் வரருக்கும் தங்கத் தேர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனும் எண்ணம் பிறக்கும். நாளாக நாளாக அந்த எண்ணம் வலுப்பெற்றது. அதற்கு வடிவம் கொடுக் கும் விதமாகத்தான் இப்போ தங்கத்தேர் பணிகளைத் துவக்கினோம். நானொரு கேன்சர் பேஷன்ட். ஆனாலும் தங்கத்தேர் ஓடுறதைப் பார்த்துட்டுத்தான் போவேன்னு இருக்கேன். அறக்கட்டளை உறுப்பினர்களும் இரவு பகல் பாராது தங்கள் சொந்த வேலைகளைக்கூட விட்டுவிட்டு இதற்கென பாடுபட்டு வருகிறார்கள். பக்தர்களும் மனசு வெச்சு தங்கத்தேர் ஓட காணிக்கைகள் கொடுத்தாங்கன்னா மிகப்பெரிய உதவியா இருக்கும். ஏகாம்பரேஸ்வரர் அருளால் எல்லாம் நல்லபடியா முடியும்னு நம்பிக்கை இருக்கு’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார், நாகராஜ ஐயர்.

2015 மார்ச் 22 அன்று, கலை நுணுக்கத்துடன் செய்யப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. தற்போது, காஞ்சிபுரம் டி.ஆர்.எஸ் பள்ளி வளாகத்தில், தங்கரதப்பணி சிறப்பாக நடந்தேறி வருகிறது! மேலும் செப்புத்தகடுகள் பதிக்கும் பணியும் சிறப்புறவே நிறைவுபெற்றது. தொடர்ந்து தங்கத் தகடுகள் ஒட்டும் பணி, நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே மெய்யன்பர்கள் பலரும் மோதிரம், வளையல், தோடு, சங்கிலி என தங்களின் ஆபரணங்களையும், இந்தப் பணிக்கு காணிக்கையாக்கியுள்ளனர். எனினும், 12 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ள தங்கத் தேர் திருப் பணி பூர்த்தியாக, பக்தர்களின் ஒத்துழைப்பும் தேவை என்கிறார்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள். பக்தர்கள் தங்களின் காணிக் கையை, தங்கமாகவோ பணமாகவோ வழங்கி ஏகாம்பரநாதரின் அருளைப் பெறலாம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *