கருணாநிதியைவிட ஸ்டாலின் மிக மோசமானவர். காடுவெட்டி குரு

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள ‘கழகத்தின் கதை – அ.தி.மு.க தொடக்கம் முதல் இன்று வரை’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பாமகவின் காடுவெட்டி குரு ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:

“காவிரி, கச்சத்தீவு, பீர்மேடு, தேவிகுளம் என எல்லாவற்றையுமே திராவிடக் கட்சிகளால் பறிகொடுத்து விட்டு நிற்கிறோம். பல பெண்கள் தாலியறுக்கக் காரணமான சாராயக் கடையைத் திறந்து வைத்தவர் கருணாநிதிதான். தமிழகத்தில் பல பாவங்களைச் செய்தவர் கருணாநிதி. அவர் முதலமைச்சராக இருந்தபோது, நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை மதுரையில் மிக மோசமாகத் தாக்கினார்கள்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தென்மாவட்டத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ‘என் தந்தை கருணாநிதி, விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்’’ என்று சொல்லி அத்தோடு இந்திரா காந்தியையும் ஒப்பிட்டு பேசினார். கருணாநிதியைவிட ஸ்டாலின் மிக மோசமானவர். தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபோது, ‘மலையாளிக்கு இங்கென்ன வேலை?’ என்று கருணாநிதி கேட்டார். அப்போதுதான், சென்னையில் உள்ள மலையாளிகளின் கடைகளை அடித்து உடைத்தார்கள். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடியவர்தான் கருணாநிதி. ஆட்சியைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். ஆனால், இப்போது ஸ்டாலினால் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது’’ என்று தி.மு.க-வை ஒரு பிடி பிடித்தவர், அடுத்ததாக அ.தி.மு.க பக்கம் தாவினார்.

“நான் இட ஒதுக்கீடு கொடுக்கமாட்டேன். எல்லா சமூக விரோதச் செயல்களையும் செய்வேன் என அராஜகங்களில் ஈடுபட்டவர் ஜெயலலிதா. ஆனால், அந்த அம்மாவுக்குத்தான் இந்த மக்கள் வாக்குகளை வாரி வழங்கினார்கள். ‘அம்மா… அம்மா…’ என்று சொல்லி அந்த அம்மாவும் போய்ச் சேர்ந்துவிட்டார்.

இப்போது முதல்வராக இருப்பவரின் பெயரைக்கூடச் சொல்ல மாட்டேன். கூட்டுறவு சொசைட்டியைக் கபளீகரம் செய்தவர் இவர். ஓ.பன்னீர்செல்வம், டீ விற்றவர். டீ விற்பதைக் குறைசொல்லவில்லை. பழனிசாமி பல கோடி வைத்துள்ளவர் என்றால், பன்னீர்செல்வம் அதைவிட அதிகம் வைத்திருப்பவர். இன்னொருத்தர் புதிதாக வந்துள்ளார். ரஜினிகாந்த். தூங்கி எழுந்தால், இமயமலைக்குத்தான் செல்வார். காவிரிப் பிரச்னைக்கு வந்தாரா? விவசாயப் பிரச்னைக்குக் குரல் கொடுத்தாரா? இவர் என்னத்தைக் கிழிச்சார்? இவர் எதுக்கு அரசியலுக்கு வரணும்? நடிகர்களை நம்பி ஏமாந்தது போதும். தமிழ்நாட்டை மாற்றுவதற்குத் தகுதியான ‘முதலமைச்சர் வேட்பாளர்’ அன்புமணியை வைத்திருக்கிறோம். அவருக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்குங்கள். இல்லையென்றால், எங்களைவிடப் படித்தவர், நல்ல தகுதியானவர் இருந்தால் காட்டுங்கள். நாங்களே அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம். அ.தி.மு.க-வைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளதைப்போல, தி.மு.க-வைப் பற்றியும் டாக்டர் புத்தகம் எழுதவேண்டும். இந்த நூல்களைப் படிப்பதன் மூலம், ‘தமிழகம் இருண்டதற்கு இந்த இரு கட்சிகள்தான் காரணம்’ என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” எனத் தடதடத்து முடித்தார் குரு.

அடுத்தாக மைக் பிடித்தார் ராமதாஸ். ‘‘இந்த நேரத்தில், எதற்காக அ.தி.மு.க-வைப் பற்றி புத்தகம் வெளியிட வேண்டும் என்று எல்லோருக்கும் சந்தேகம் எழலாம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் நடந்த சம்பவங்களையும், கூவத்தூரில் நடத்த கூத்துக் கும்மாளங்களையும் பார்த்தபோதுதான், இப்படி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அ.தி.மு.க என்பது கொள்கையே இல்லாத, சினிமாக் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இன்றளவும் அதே நிலைதான் நீடிக்கிறது. இளைஞர்களுக்கு அ.தி.மு.க-வின் வரலாறு தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த நூல் எழுதப்பட்டது. இப்போது அ.தி.மு.க அரசு எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவிலேயே ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு இரண்டு முறை சிறைக்குச் சென்று, அதனால் பதவியையும் இழந்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். தமிழகத்தின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டவர் ஜெயலலிதாதான். தலைமையே இப்படி இருந்தால், நிர்வாகிகள் எப்படி இருப்பார்கள் என்று யூகித்துக்கொள்ளுங்கள். காடுவெட்டி குரு, தி.மு.க-வைப் பற்றி புத்தகம் எழுதச் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வின் ஊழல் பற்றி எழுதவேண்டும் என்றால், ஐயாயிரம் பக்கங்களுக்கும் மேல் எழுதவேண்டியிருக்குமே!” என்று பேசினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *