பாமக எம்.எல்.ஏ. மற்றும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு 3 ஆவது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடந்தபோது மரக்காணம் பகுதியில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் தலித் மக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் மற்றும் அரசு பேருந்துகளுக்கு தீ வைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தனர். அதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட பாமக காடுவெட்டி குரு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே, கடுவெட்டி குரு உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 20 பேர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்திருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து 2 முறை அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இந்நிலையில், குருவை மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் இன்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு காடுவெட்டி குரு சிறை வைக்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply